Breaking News

கோ.ஆப்டெக்ஸில் அரசு ஊழியர்களுக்கு வட்டியில்லா கடன் விற்பனை வசதி - அமைச்சர் ஆர்.காந்தி பேச்சு


காஞ்சிபுரம்,செப்.30:

தீபாவளிப்பண்டிகையையொட்டி கோ.ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 30 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடியுடன் அரசு ஊழியர்களுக்கு வட்டியில்லா கடன் விற்பனை வசதி செய்யப்பட்டுள்ளதாக கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் தேரடி அருகில் கோ.ஆப்டெக்ஸ் ஜவுளி விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் தீபாவளிக்கான சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.

விழாவிற்கு கோ.ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் கவிதா ராமு,கைத்தறித்துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார்,எம்பி க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோ.ஆப்டெக்ஸ் நிறுவன முதன்மை பொது மேலாளர் ஏ.பி.ரவி வரவேற்றார்.

விழாவில் கலந்து கொண்டு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தும்,முதல் விற்பனையையும் செய்த பின்னர் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசியது.

கடந்த 1935 ஆம் ஆண்டு தொடங்கி 90 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வரும் நிறுவனம் கோ.ஆப்டெக்ஸ்.கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஆண்டு தோறும் 30 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கி வருகிறது.வரக்கூடிய தீபாவளிப்பண்டிகையையொட்டியும் பட்டு, பருத்தி, கைத்தறி ரகங்களுக்கு 30 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும்.

அரிய வேலைப்பாடுகளுடன் எழில் கொஞ்சும் வண்ணக் கலவைகளில் பட்டு மற்றும் கைத்தறி ரக சேலைகள் புதிய வடிவமைப்பிலும்,பட்டு மற்றும் பருத்திப்புடவைகள் குறைந்த விலையில் நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வந்திருக்கின்றன.

கோ.ஆப்டெக்ஸ் நிறுவனம் தற்போது இணையதளத்தின் மூலமாகவும் விற்பனை செய்து வருகிறது.தீபாவளிப் பண்டிகைக்காக அரசு ஊழியர்களுக்கு வட்டியில்லா கடன் விற்பனை வசதியை வழங்குகிறது. அரசு ஊழியர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி தேவையான துணி ரகங்களை வாங்கி தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்றும் பேசினார்.

விழாவில் கைத்தறித்துறை கூடுதல் இயக்குநர் தமிழரசி,இணை இயக்குநர் கணேசன்,மாவட்ட ஊராட்சிக்குழுவின் துணைத் தலைவர் நித்யா சுகுமார்,மண்டல மேலாளர் த.ரத்னா ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.நிறைவாக காஞ்சிபுரம் கோ.ஆப்டெக்ஸ் விற்பனை மேலாளர் எஸ்.பெருமாள் நன்றி கூறினார்.



CM சார், என்னை பழிவாங்கிக் கொள்ளுங்கள்” –

தமிழ்நாடு அரசை குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்ட விஜய்


No comments

Thank you for your comments