Breaking News

காஞ்சிபுரத்திலிருந்து தாம்பரத்துக்கு குளிர்சாதன பேருந்து -அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து தொடக்கி வைத்தார்

காஞ்சிபுரம்,செப்.12:

காஞ்சிபுரத்திலிருந்து தாம்பரத்துக்கு செல்லும் குளிர்சாதன பேருந்தை கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து தினசரி தாம்பரம் செல்லும் வகையில் குளிர்சாதன பேருந்து வேண்டும் என எம்எல்ஏ எழிலரசன் காஞ்சிபுரம் வந்திருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டிருந்தார்.

எம்எல்ஏ எழிலரசனின் வேண்டுகோளை ஏற்று துணை முதல்வர் குளிர்சாதன பேருந்து விடுமாறு அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியிருந்தார்.அவரது அறிவுரையின்படி காஞ்சிபுரத்திலிருந்து தாம்பரத்துக்கு குளிர்சாதன பேருந்து மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் குளிர்சாதன பேருந்தை கொடியசைத்து தொடக்கி வைக்கும் விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார்.எம்பி. க.செல்வம்,எம்எல்ஏக்கள் க.சுந்தர்,எழிலரசன்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரசுப் போக்குவரத்துக் கழக துணை வணிக மேலாளர் ஸ்ரீதர் வரவேற்று பேசினார்.கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி புதிய குளிர்சாதன பேருந்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் உட்பட முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் அப்பேருந்தில் சிறிது தூரம் பயணித்து திரும்பினார்கள்.ஒரு முறை குளிர்சாதன பேருந்தில் காஞ்சிபுரத்திலிருந்து தாம்பரம் செல்ல ரூ.85 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் தலைவர் மலர்க்கொடி குமார்,திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ்,போக்குவரத்துக் கழக துணை மேலாளர் தெட்சிணாமூர்த்தி, காஞ்சிபுரம் கிளை மேலாளர் சீனிவாசன்,மாமன்ற உறுப்பினர் மல்லிகா ராமகிருஷ்ணன் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments