Breaking News

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டம் – 20,331 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர் : அமைச்சர் ஆர்.காந்தி

காஞ்சிபுரம், ஆக.12:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைக்கப்பட்டுள்ள தாயுமானவர் திட்டத்தால் 20331 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவர் என அத்திட்டத்தை தொடக்கி வைத்த கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.


சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளில் 70 வயதுக்கு மேற்பட்டோர் வசிக்கும் இல்லங்களுக்கே நேரில் சென்று குடிமைப்பொருள்கள் வழங்கும் திட்டமான தாயுமானவர் திட்டத்தை தொடக்கி வைத்தார்.

இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாமல் கிராமத்தில் இத்திட்டத்தை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் தொடக்கி வைத்தார்.

பின்னர் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கே சென்று குடிமைப்பொருட்களை வழங்கி அவர்களோடு கலந்துரையாடினார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 601 நியாயவிலைக்கடைகளை சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளையுடைய 20331 குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள். 

இதன் மூலம் 26,316 பயனாளிகளுக்கு அவர்களது இல்லங்களிலேயே குடிமைப்பொருள் விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.மாதம் தோறும் 2 வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியான பயனாளர்கள் விபரம் பெறப்பட்டு கள அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மின்னணு எடைத்தராசு உள்ளிட்ட உபகரணங்களுடன் பயனாளிகளின் இல்லத்திற்கே சென்று குடிமைப்பொருட்கள் விநியோகிக்கப் படவுள்ளதாகவும் அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் ஊராட்சியில் முதியோர்கள் இல்லங்களுக்கு குடிமைப்பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனத்தையும் அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் ஒன்றியக்குழுவின் தலைவர் மலர்க்கொடி குமார் உட்பட நியாயவிலைக்கடை பணியாளர்கள், அரசு அலுவலர்கள்,உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments