Breaking News

செம்மஞ்சேரி நீர்நிலை ஆக்கிரமிப்பு வழக்கு : நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அரசு... தனது சட்டங்களை மீறி செயல்படலாமா? - ஐகோர்ட் கேள்வி

சென்னை: 

நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அரசு, தனது சட்டங்களை மீறி செயல்படலாமா என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், செம்மஞ்சேரியில் நீர் நிலையை ஆக்கிரமித்து பல கட்டுமானங்கள் உள்ள நிலையில், காவல் நிலையத்துக்கு எதிராக மட்டும் வழக்கு தொடர்ந்த அறப்போர் இயக்கத்துக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது.


செம்மஞ்சேரியில் நீர் நிலையில் காவல் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2019-ஆம் ஆண்டு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குறிப்பிட்ட அந்த நிலம், மேய்க்கால் தாங்கல் சாலை என்பது மேற்கால் சாலை என வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.


இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், உயர் நீதிமன்றம் நியமித்த குழுவின் அறிக்கையிலும், காவல் நிலையம் அமைக்க அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவுகளிலும் அந்த நிலத்தை நீர் நிலை என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அரசு, தனது சட்டங்களை மீறி செயல்படலாமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீர் நிலையை ஆக்கிரமித்து ஏராளமான கட்டிடங்கள் உள்ள நிலையில், காவல் நிலையம் அமைப்பதற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்து உள்ள மனுதாரரின் செயல், கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்த நீதிபதிகள், காவல் நிலையம் மட்டுமல்லாமல் நீர்நிலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டுமானங்களும் அகற்றப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

பின்னர் வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்க அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை 10 நாட்களுக்கு தள்ளி வைத்தனர்.


Madras High Court Slams Encroachments in Semmanchery Waterbody Case – Govt Questioned

No comments

Thank you for your comments