Breaking News

பூந்தண்டலம் பொறியியல் கல்லூரியில் “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்

 காஞ்சிபுரம், ஆக.13:

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஒன்றியம், பூந்தண்டலம் தனியார் பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற்ற “மாபெரும் தமிழ்க் கனவு” — தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.


தமிழ் இணையக் கல்விக்கழகம், உயர்கல்வித் துறையுடன் இணைந்து, 2022-23 மற்றும் 2023-24 கல்வியாண்டுகளில் தமிழ்நாட்டின் 200 கல்லூரிகளில் 300 சொற்பொழிவுகள் மூலம் 2,000 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் மாணவர்களை சென்றடைந்தது. இதன் 100வது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர், இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெறும் என அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பின் அடிப்படையில் 2025 ஆகஸ்ட் மாதத்திலிருந்து தொடங்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியின் நோக்கம், உலகின் செழித்த பண்பாடுகளில் முதன்மையான தமிழ்ப் பண்பாட்டின் பெருமையும், எதிர்கொண்ட சவால்களும், அதன் வளமும் இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதாகும். தமிழர் மரபு, இலக்கியச் செழுமை, தொன்மை, சமூக சமத்துவம், மகளிர் மேம்பாடு, தொல்லியல் ஆய்வு, தொழில் வளர்ச்சி, கல்விப் புரட்சி போன்ற தலைப்புகளில் சிறந்த சொற்பொழிவாளர்கள் உரையாற்றுகின்றனர்.



நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நூல்கள், தமிழ்ப் பெருமிதம் குறித்த குறிப்பேடுகள் வழங்கப்பட்டன. மேலும், உயர்கல்வி, வேலைவாய்ப்பு, வங்கி கடன், தொழில் வாய்ப்புகள் போன்றவற்றை அறிமுகப்படுத்தும் காட்சி அரங்குகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து, சொற்பொழிவாளர் திருமதி அருள்மொழி “இனிவரும் உலகம்” என்ற தலைப்பில் உரையாற்றி, மாணவர்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

No comments

Thank you for your comments