Breaking News

காஞ்சிபுரத்தில் தெய்வத்தமிழ் ஆய்வு மாநாடு – கோயில்கள் கண்காட்சி சிறப்பு

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69 வது பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி தினத்தை கொண்டாடும் விதமாக சங்கரா கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை தெய்வத்தமிழ் ஆய்வு மாநாடு தொடங்கியது. 


காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69 வது பீடாதிபதியாக இருந்து வந்தவர் ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரது 91 வது ஜெயந்தி தினத்தையொட்டி காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் தெய்வத்தமிழ் ஆய்வு மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இன்று திங்கள்கிழமை மாலையில் நிறைவு பெறுகிறது.

தொடக்க விழாவிற்கு கல்லூரியின் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.கல்லூரியின் முதல்வர் கலை.ராம.வெங்கடேசன் நோக்கவுரை நிகழ்த்தினார்.கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் ஜெ.ராதா கிருஷ்ணன் வரவேற்று பேசினார்.

தெய்வத்தமிழ் ஆய்வு மாநாட்டினை தில்லி பல்கலைக்கழக இந்திய மொழிகள் மற்றும் இலக்கியவியல் துறையின் முன்னாள் தலைவர் கோவிந்தசாமி ராஜகோபால் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

விழாவில் இமாலய சாதனையாளர் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற நூலினை ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள் வெளியிட அதன் முதல் பிரதியை சென்னை லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் அருணை.பாலறாவாயன் பெற்றுக் கொண்டார்.

கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்திய தேசம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்கள் போல வடிவமைக்கப்பட்டிருந்த கோயில்கள் கண்காட்சியை கலவை ஆதீனம் ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் திறந்து வைக்கும் விதமாக அதற்கான விளம்பர பதாகையை திறந்து வைத்தார்.

விழாவில் இமாலய சாதனையாளர் என்ற நூலின் ஆசிரியர் புலவர் வே.மகாதேவன், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் எம்.எஸ்.ஸ்ரீலட்சுமி,கனடா தென்னாசிய நுண்கலை கற்கை மைய தமிழ்த்துறைத் தலைவர் பாலசுந்தரம் இளையதம்பி மற்றும் தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் உட்பட பலரும் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். 

இதன் தொடர்ச்சியாக தொடங்கிய ஆய்வு மாநாட்டில் மலேசியா,இலங்கை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தமிழ் அறிஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கோயில்கள் கண்காட்சி :  

தெய்வத்தமிழ் மாநாட்டின் ஒரு பகுதியாக சங்கரா கல்லூரி வளாகத்தில் அயோத்தி,கொல்கத்தா,மதுரை, தஞ்சாவூர் உட்பட 100க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள கோயில்கள் போன்று வடிவமைக்கப்பட்டிருந்த கோயில்கள் கண்காட்சி பார்வையாளர்களை கவர்ந்தது. 

இக்கண்காட்சியை ரத்தனகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் மற்றும் கலவை ஆதீனம் சச்சிதானந்த சுவாமிகள் பார்வையிட்டு பாராட்டினார்கள்.  

இதே மாநாட்டின் மற்றொரு நிகழ்வாக புத்தகங்கள் கண்காட்சியும் நடைபெற்றது.சங்கரா பதிப்பகம் உட்பட பல பதிப்பங்கள் புத்தகங்களை பாதி விலைக்கு விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.


kanchipuram-theivathamizh-conference-temple-exhibition-2025


No comments

Thank you for your comments