Breaking News

தமிழக காவல்துறை – இந்திய காவல்துறை அறக்கட்டளை இடையே துறை சார்ந்த சீர்திருத்தத் திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்



தமிழ்நாடு காவல்துறையில் துறை சார்ந்த சீர்திருத்தத் திட்டம் உருவாக்க  தமிழ்நாடு காவல்துறைக்கும் இந்திய காவல் அறக்கட்டளைக்கும் இடையே இன்று 22.08.2025 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது, இத்திட்டமானது ஆராய்ச்சி/திறன் மேம்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


இந்திய காவல் அறக்கட்டளை ஒரு தன்னிச்சையான, பல்துறை வல்லுநர்கள் அடங்கிய முதன்மையான சிந்தனைக் குழுவாகும், இது காவல் மற்றும் பல்வேறு துறை வல்லுநர்கள்   (பணியிலுள்ள மற்றும் ஓய்வு பெற்றவர்கள்) அடங்கிய புகழ்பெற்ற கல்வி ஆராய்ச்சியாளர்கள், பாதுகாப்பு, குடிமைப்பணி அதிகாரிகள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப்படுகிறது, இந்தியாவில் காவல் பணியை மேம்படுத்துவதற்காக இந்த அமைப்பு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.  

இந்த அமைப்பு திரு. N. ராமச்சந்திரன், முன்னாள் காவல்துறை இயக்குநர், மேகாலயா, என்பவரால் நிறுவப்பட்டதாகும். தற்போது திரு. ஓம் பிரகாஷ் சிங் இ.கா.ப., (முன்னாள் காவல்துறை இயக்குநர் , உத்திரபிரதேசம், CISF மற்றும் NDRF) இதன் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.     டாக்டர் இஷ் குமார் இ.கா.ப.,  (முன்னாள் காவல்துறை இயக்குநர், விஜிலென்ஸ், தெலுங்கானா மற்றும் காவல்துறை இயக்குநர் NCRB), துணைத் தலைவராகவும், துறை சார்ந்த சீர்திருத்தத்  திட்ட  இயக்குநராகவும் உள்ளார்.

தமிழ்நாடு காவல்துறை தனது சமூக ஈடுபாட்டின் மூலம் குடிமக்களுக்கு சேவையை உறுதிசெய்துவருகிறது.. பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குதல் மற்றும் காவல் நிலையங்களில் குறை தீர்க்கும் நடைமுறையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. 

இதன் மூலம் பொது மக்களிடையே நம்பிக்கையை வளர்த்து சமூகத்திற்கு  சிறந்த சேவை செய்ய வழிவகைசெய்கிறது. பெண்கள் பாதுகாப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி மற்றும் காவல்துறையின் பணி சூழலை  மேம்படுத்துதல் ஆகியவற்றில் இத்திட்டம் சிறப்பு கவனம் செலுத்தும்.

இந்த துறை சார்ந்த சீர்திருத்தத் திட்டமானது ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள 15 காவல் நிலையங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 15 காவல் நிலையங்களிலும் நடத்தப்படும். 

இத்திட்டத்தில் புகார்தாரர்கள், பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், குடிமக்களில் சேவை வேண்டுவோர், அரசு சாரா நிறுவனங்கள், அரசு மற்றும் காவல்துறை பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அடங்கிய பொது ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

இதன் மூலம்  காவல்துறை கவனம் செலுத்தப்பட வேண்டிய  பகுதிகளை அடையாளம் காணவும், காவல்நிலையாணை கையேட்டில் மாறுதல்கள் கொண்டுவரவும், காவல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிடபட்டுள்ளது.  

இத்திட்டம்  ஒரு வருடத்திற்கு அமலில் இருக்கும், பொதுவான நபர்களை கொண்டு தணிக்கை மேற்கொள்ளப்படும்.  அதன் அடிப்படையில், முன்மொழியப்பட்ட  பரிந்துரைகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டம் பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்திற்கான மாநில தொடர்பு அதிகாரியாக முனைவர்.  பா. சாமூண்டிஸ்வரி இ.கா,ப., காவல்துறை தலைவர், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை அவர்களும்  மற்றும் மேற்பார்வையாளராக ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளராக 5 வது காவல் ஆணையரின் உறுப்பினராக இருந்த  ஓய்வு பெற்ற, திரு. ராதாகிருஷ்ணன், இ.கா.ப., அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இத்திட்ட துவக்க விழாவில் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப., தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத் தலைவர் அவர்களுடன் காவல்துறை தலைமை அலுவலக உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 


No comments

Thank you for your comments