ஒரு தேர்தலைக் கூட சந்திக்காமல் பலன் பெற நினைப்பதே பெரும் ஊழல்… -விஜய்க்கு இபிஎஸ் சவுக்கடி
உத்தரமேரூர். ஆகஸ்ட் 21.
இதையடுத்து உத்திரமேரூர் தொகுதிக்குப் பயணமான இபிஎஸ், அங்கு எஸ்.பி சாலையில், வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்.
“சில பேர் புதிதாக கட்சியைத் தொடங்கி இரண்டாவது மாநாடுதான் நடத்தியிருக்காங்க, அது ஒன்றரை வயதுக் குழந்தை. இது, அதிமுக எழுச்சி பயணத்தில் 105வது கூட்டம். இதுவே மாநாடு போல் காட்சியளிக்கிறது. இரண்டு மாநாட்டுக்கே இப்படி என்றால், ஜூலை 7ம் தேதி தொடங்கி 105 எழுச்சி மாநாடுகள் நடத்தியிருக்கிறோம். அதிமுக அத்தனை மக்கள் செல்வாக்குள்ள இயக்கம். எனவே, அதிமுக கூட்டணி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்.
நாங்கள் மக்களை சந்திக்கிறோம் என்றால், எம்ஜிஆர், அம்மா நாட்டை ஆண்டார்கள். அவர்கள் மறைவுக்குப் பிறகு நாங்கள் ஆண்டோம். இப்படி 31 ஆண்டுகள் அதிமுக ஆட்சி புரிந்திருக்கிறது. இன்னும் ஒருமுறை கூட எம்.எல்.ஏ ஆகவில்லை, ஒரு முறை கூட தேர்தலை சந்திக்கவில்லை. ஆசைபடுவது தவறல்ல. இது, ஜனநாயக நாடு, அனைவருக்கும் உரிமையுண்டு. ஆனால் உழைக்காமலே பலன் பெற நினைப்பதே பெரும் ஊழல்.
.jpeg)
எம்ஜிஆரும், அம்மாவும் பட்டிதொட்டியெங்கும் சென்று கட்சியை வளர்த்தனர். அதிமுக உயிரோட்டமுள்ள இயக்கம் எந்தக் கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது. பல்வேறு சோதனைகளை வென்றுதான் ஆலமரம் போல தழைத்தோங்கி நிற்கிறது. அதிமுக ஆட்சியில் விலைவாசியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது விலை கட்டுப்பாட்டு நிதி என்று ரூ.100 கோடி நிதி ஒதுக்கி அதன்மூலம், அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ, அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழகத்தில் மக்களுக்குக் கொடுத்தோம்.
ஒரு மாநிலம் வளர்ச்சி பெற உணவு உற்பத்தியும், தொழில் வளர்ச்சியும் பெருக வேண்டும். இரண்டுமிருந்தால் எந்தப் பிரச்னையுமில்லை. அதிமுக ஆட்சியில் சரியான பாதையில் சென்றோம்.
அதிமுக சார்பில் நானும் சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் பேசி அழுத்தம் கொடுத்த காரணத்தால் வேறு வழியின்றி, 28 மாதம் கழித்துத் தான் உரிமைத் தொகை கொடுத்தார். இப்போது மேலும் 30 லட்சம் பேருக்கு விதிகளைத் தளர்த்தி உரிமைத் தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
அதுவும் பெண்களின் கஷ்டங்களைப் பார்த்து கொடுக்கவில்லை, அடுத்தாண்டு தேர்தல் வருவதால் ஓட்டுக்காகத்தான் கொடுக்கிறார். இதை முன்பே கொடுத்திருந்தால் என்ன? 52 மாதம் உரிமைத் தொகையை ஓட்டுக்காகத்தான் கொடுக்கிறார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிக்கு 1500 ரூபாய் கொடுப்பதாகச் சொன்னோம். நாங்கள் வாதிட்டதால்தான் உங்களுக்கு உரிமைத் தொகை கிடைத்தது. அதிமுக இருப்பதால்தான் அழுத்தம் கொடுத்து தீர்வு காண்கிறோம்.
விவசாயிகளுக்காக அதிமுக ஆட்சியில் குடிமராமத்துத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர்த்தேக்கப்பட்டன, அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது.
ஒருபக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொருபக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. உரம், கடனுதவி சரியான நேரத்தில் கிடைத்தது. விவசாயிகள் வாங்கியிருந்த பயிர்க்கடன்களை ஒரே அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை தள்ளுபடி செய்தோம், வறட்சி உள்ளிட்ட பேரிடரின்போது பயிர்க்காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் இணைக்கப்பட்டு, அதன்மூலம் அவர்களுக்கு இழப்பீடு பெற்றுக்கொடுத்தோம்.
விவசாயத் தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள், ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் கொடுத்தோம். உழவர் பாதுகாப்புத் திட்டம் கொடுத்தோம், முதியோர் உதவி திட்டம் மூலம் லட்சக்கணக்கான முதியோருக்கு மாத உதவித்தொகை கொடுத்தோம். ஏழைப் பெண்களின் பொருளாதார சூழலால் திருமணம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் கொடுத்தோம்.
தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் கொடுத்தோம். இன்று ஒரு பவுன் விலை ரூ.75 ஆயிரம் தாண்டிவிட்டது. அத்திட்டம் இன்று நடைமுறையில் இருந்திருந்தால் ஏழைப் பெண்களுக்கு வரப்பிரசாதமாக இருந்திருக்கும்.
இதனை திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதேபோல் கூடுதலாக மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி வழங்கப்படும்.
கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவர்கள் ஆக வேண்டும் என்ற கனவை நனவாக்க, 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கினோம். அதன்மூலம் 2818 பேர் ஒரு ரூபாய் செலவில்லாமல் இலவசமாக மருத்துவம் படித்து இப்போது மருத்துவர் ஆகிவிட்டனர். மகளிர் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு சென்றுவர ஏதுவாக அம்மா இரு சக்கர வாகன திட்டம் மூலமாக சுமார் 3 லட்சம் பேருக்கு ரூ.25 ஆயிரம் மானியம் கொடுத்தோம்.
இந்த திட்டத்தையும் திமுக அரசு ரத்து செய்துவிட்டது. உங்கள் ஆதரவினால் அதிமுக அரசு மீண்டும் அமையும்போது இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். விலைவாசி உயர்வினால் வருடத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் கூடுதலாக ஒரு குடும்பத்தில் செலவழிக்க வேண்டிய சூழல் உள்ளது. விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. கொலை நிலவரம் வெளியாகிறது. சிறுமி முதல் பாட்டி வரை பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை. 4 காவலர்கள் ஒரு கஞ்சா ஆசாமியைப் பிடிக்க போகிறார்கள். அவர்களை கஞ்சா ஆசாமி தாக்குகிறார். அந்த அளவுக்கு காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத சூழல்.
ஏனென்றால் அது கார்ப்பரேட் கம்பெனி. மத்தியிலும், மாநிலத்திலும் குடும்பத்தினர்தான் இருப்பார்கள். நாட்டை சுரண்டும் கட்சி. அந்த ஒரு குடும்பம் நாட்டை சுரண்ட நாம் துணை நிற்க வேண்டுமா? ஸ்டாலின் தலைவர், உதயநிதி இளைஞரணிச் செயலாளர், கனிமொழி மகளிரணி.
இந்த மூன்றுதான் முக்கிய பதவிகள். மூன்றையும் ஒரே குடும்பமே பிரித்துக்கொண்டது. இந்த வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 அமையும்.
ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் விஞ்ஞானக் கல்வி என்ற நோக்கத்தில் அம்மாவின் எண்ணத்தில் உதித்த அற்புதமான திட்டம் லேப்டாப் வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சின் 10 ஆண்டுகாலத்தில் ரூ.7300 கோடி நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. அதையும் திராவிட மாடல் அரசு நிறுத்திவிட்டது. நிறுத்தப்பட்ட இத்திட்டமும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அமல்படுத்தப்படும்.
கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். அதில் ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணியில் அமர்த்தி, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தோம். திமுக அரசு ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து அதனை மூடிவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும்.
கொரோனா காலத்தில் ரேஷன் கடையில் விலையில்லா பொருட்கள் ஓராண்டு கொடுத்தோம். அதேபோல் தைப் பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசு 2500 ரூபாய் கொடுத்தோம். கொரோனா காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம், பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆல்பாஸ் போட்டுக்கொடுத்தோம்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் 10% கூட நிறைவேற்றவில்லை, 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்றார், சம்பளம் உயர்த்தப்படும் என்றார், ஆனால் செய்யவில்லை. இப்போது 100 நாள் வேலைத்திட்டம் 50 நாளாக சுருங்கிவிட்டது.
தொழிலாளிகளுக்கான சம்பளத்தையே அதிமுக தான் மத்திய அரசிடம் போராடி வாதாடி, முதற்கட்டமாக ரூ.2999 கோடி பெற்றுக்கொடுத்தோம். ஆட்சியில் இருப்பது திமுக, ஆனால் நிதி பெற்றுக்கொடுப்பது அதிமுக. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்காக உழைக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான்.
அடுத்து அதிமுக ஆட்சி அமைந்ததும் ஏழைகள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும். இந்த உத்திரமேரூர் தொகுதியில், வாலாஜாபாத் பாலாறு பகுதியைச் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் ஆதாரமான நிலத்தடி நீட் மட்டத்தை உயர்த்தும் வகையில் ஒரு அணைக்கட்டும், தரைப்பாலத்தை மேம்பாலமாக உயர்த்திக் கட்டித் தரும்படியும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர், அதிமுக அரசு அமைந்ததும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும்.
நான் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோது தான் கிராமத்திலிருந்து நகரம் வரை அதிகமாக தார்சாலை அமைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் அப்போது தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்தார், இந்தியாவிலேயே தார்சாலை அதிக நீளமுள்ள மாநிலம் தமிழ்நாடு என்ற பெயர் பெற்றோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
உங்களுடன் ஸ்டாலின் என்று இப்போதுதான் நான்காண்டுகள் கழித்து ஸ்டால்ன் மக்களிடம் வந்திருக்கிறார். வீடுவீடாக அதிகாரிகள் வருகிறார்கள்.
மக்களிடம் இருக்கும் 46 பிரச்னைகள் பற்றி மனு கொடுத்தால், அதனை நிறைவேற்றிக் கொடுப்பார்களாம். நடக்குமா… இது எல்லாம் நாடகம்தானே?
46 பிரச்னைகள் மக்களுக்கு இருப்பது தெரியாத ஒரு முதல்வர் நம்மை ஆள்கிறார். இன்னும் 8 மாதத்தில் ஆட்சி முடியப்போகிறது. அதற்குள் இவற்றை நிறைவேற்ற முடியுமா? சதுரங்க வேட்டை படத்தில் வருகிறதுபோல, ஆசையைத் தூண்டி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று மீண்டும் அட்சிக்கு வர இப்படி விளம்பரம் செய்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில் பாலாற்றின் குறுக்கே 42 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்பட்டது, 41 கோடி மதிப்பீட்டில் உத்திரமேரூர் தொகுதியில் 117 ஏரிகள் தூர்வாரப்பட்டது,
8 கோடி மதிப்பில் செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை, 8 கோடி மதிப்பில் எம்ஜிஆர் பெயரில் கலை அறிவியல் கல்லூரி, உத்திரமேரூர் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது, பாலங்கள், கால்நடை மருந்தகம், அம்மா மினி கிளினிக் 10 அமைக்கப்பட்டது, மீண்டும் இத்திட்டம் தொடரும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம், பைபை ஸ்டாலின்” என்று முடித்தார்.
.jpeg)
.jpeg)
No comments
Thank you for your comments