Breaking News

ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்தால் மட்டுமே ஆட்சியை பிடிக்க முடியும் – முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் பேச்சு


காஞ்சிபுரம், ஜூலை 20:

ஓபிஎஸ் அணியும், இபிஎஸ் அணியும் இணைந்தால் மட்டுமே தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியும் என முன்னாள் அமைச்சரும், அஇஅதிமுக மீட்புக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளருமான வைத்தியலிங்கம் காஞ்சிபுரத்தில் பேசினார்.

காஞ்சிபுரம் அருகே கருக்குப்பேட்டையில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் அஇஅதிமுக மீட்புக் குழு சார்பில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தீர்மானங்கள் :

கூட்டத்திற்கு ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமை வகித்து மாவட்ட வளர்ச்சி குறித்த 10 தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.

  • பெண்கள் பாதுகாப்பில் யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும், 
  • சாலாவக்கம் தனித் தாலுகாவாக அறிவிக்கப்பட வேண்டும், 
  • 65 வயது தாண்டிய அனைத்து முதியவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும், 
  • வாலாஜாபாத்தில் அரசின் சார்பில் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் 

என்பன உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்திற்கு மீட்புக்குழுவின் துணை ஒருங்கிணைப்பாளர் பி.எச்.பாண்டியன் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சரும், குழுவின் இணை ஒருங்கிணைப்பாளருமான வைத்தியலிங்கம் கலந்து கொண்டு குழுவில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஆர்.வி.ரஞ்சித்குமார் சார்பில் கைக்கடிகாரம் பரிசு வழங்கி பாராட்டி பேசியதாவது..

வரக்கூடிய சட்டப் பேரவைத் தேர்தலில் ஓபிஎஸ் அணியும், இபிஎஸ் அணியும் இணைந்தால் மட்டுமே தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியும். அண்ணா பிறந்த மண்ணான காஞ்சிபுரத்தில் தான் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை முதலில் நடத்தி 39 தொகுதிகளிலும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

இரு அணிகளும் இணைந்தால் மட்டுமே வெற்றி சாத்தியமாகும்.வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் மாநாடு சிறந்த முடிவுகளைத் தரும் மாநாடாக இருக்கும் என்று பேசினார்.

கூட்டத்தில் பேசிய குழுவின் மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் பேசுகையில் அதிமுகவுடன் இணைவதற்கான அனைத்து வகையான செயல்களையும் முன்னெடுத்து விட்டோம். 

இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் எடப்பாடி கே.பழனிசாமியிடம் தான் உள்ளது. அவரது காலில் விழக்கூட தயாராக இருக்கிறோம். தயவு செய்து எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பேசினார். 

கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


Labels / Keywords: Tamil Nadu Politics / AIADMK News / OPS EPS Unity / Vaithilingam Speech / Kanchipuram District Politics / ADMK District Meeting / Political Alliance Tamil Nadu /  AIADMK Reunification / 2026 TN Assembly Elections / OPS EPS Conference / Karukkuppettai Political Meet / Jayalalithaa Legacy / Kanchipuram News

No comments

Thank you for your comments