Breaking News

“திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றாக சேர வேண்டும் – அதுவே ராஜதந்திரம்” – எஸ். வைகைச் செல்வன்

 காஞ்சிபுரம், ஜூலை 28:

“திமுகவுக்கு எதிராக இருப்பது ஒரு கட்சி மட்டும் அல்ல. எனவே திமுகவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். அதுவே உண்மையான ராஜதந்திரம்,” என்று முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக இலக்கிய அணியின் செயலாளர் எஸ். வைகைச் செல்வன் தெரிவித்தார்.



அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி விரைவில் காஞ்சிபுரத்திற்கு எழுச்சிப் பயணமாக வரவுள்ளதாக, அதனை வரவேற்கும் ஏற்பாடுகளைப் பற்றிய ஆலோசனைக் கூட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு, கட்சியின் வளர்ச்சி மற்றும் இயக்கத்தின் நிலை குறித்து உரையாற்றினர்.

கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எஸ். வைகைச் செல்வன் கூறியதாவது:

“எடப்பாடியாரின் எழுச்சிப் பயணத்தில் மக்கள் அலைபாய்ந்து வருகிறார்கள். திமுக பதில் சொல்ல முடியாமல் நடுங்கி நிற்கிறது. தில்லி கூட இதை வியந்து பார்க்கிறது. இது அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி.”

அதிமுக ஒரு பலமான இயக்கம் என்றும், திமுகவிற்கு எதிராகச் செயல்படும் சீமான் மற்றும் விஜய் உள்ளிட்டவர்களும் ஒன்று சேர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“திமுக பொது எதிரியாக இருப்பதால், அதனை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாகச் சேரவேண்டும். இதுவே உண்மையான 'ராஜதந்திரம்' என்று எடப்பாடியார் வலியுறுத்துகிறார்,” என கூறினார்.

மேலும், முதல்வர் பதவிக்குத் தகுதி குறித்து தொல். திருமாவளவனின் கேள்வியை மேற்கோளாகக் கூறிய அவர்,

“இதை திமுக தலைவர் ஸ்டாலினிடம் நேரடியாகக் கேட்கத் துணிந்திருக்கிறாரா?” என சவாலிட்டு பேசினார்.

No comments

Thank you for your comments