இரண்டே மாதங்களில் அல்லாபாத் ஏரி முழுமையாக அழகுபடுத்தப்படும் – காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி உறுதி
காஞ்சிபுரம் :
திருக்காலிமேடு பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அல்லாபாத் ஏரி, கடந்த சில ஆண்டுகளாக காடுகளும் முட்புதர்களும் பரவி, நிராகரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டு வந்தது. இந்த ஏரியை நகருக்கு முக்கிய நீர் ஆதாரமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் எழுப்பிய கோரிக்கையை முன்னிட்டு, காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் மற்றும் மேயர் மகாலட்சுமி முயற்சியில், எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் அமைப்பும், கோமெட்சு தொழிற்சாலையும் இணைந்து சீரமைப்புப் பணிகளை துவக்கினர்.
கோமெட்சு நிறுவனம், ரூ.80 லட்சம் மதிப்பிலான JCB இயந்திரங்களை நன்கொடையாக வழங்கி, இரு மாதங்களுக்கு முன்பு தூர்வாரும் பணிகள் தொடங்கின. தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், மேயர் மகாலட்சுமி, கோமெட்சு நிர்வாக மேலாளர் நோபாகாஷி டாக்யுசி, எக்ஸ்னோரா நிர்வாகி மீனாட்சிசுந்தரம் மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள் சந்துரு, சுரேஷ் ஆகியோர்களுடன் இணைந்து பணிகள் நடைபெறும் பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.
அப்போது பேசிய அவர்,
“அல்லாபாத் ஏரி முழுமையாக தூர்வாரப்பட்டு, அதன் கரைகள் உயர்த்தப்பட்டு, நடைப்பயிற்சிக்கு ஏற்ற வழிகள் அமைக்கப்படும். மரங்கள் நடப்பட்டு, பசுமை சூழ்நிலையில், இது ஒரு அழகிய பொதுநல ஏரியாக மாறும். இரண்டே மாதங்களில் இது நகரின் முக்கியமான நீர் சேமிப்பு மற்றும் சீரமைப்பு மையமாக மாறும்” என தெரிவித்தார்.
மேலும், ஏரியின் நிலையை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சி, தன்னார்வ அமைப்புகள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் இணைந்து செயல் திட்டங்கள் மேற்கொண்டு வருவது, பொதுமக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் செயலாக வரவேற்கப்படுகிறது.
No comments
Thank you for your comments