Breaking News

காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயிலில் கருட வாகன சேவை

காஞ்சிபுரம், ஜூலை 5:

காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயிலில் பெரியாழ்வார் அவதார தினத்தையொட்டி உற்சவர் வரதராஜசுவாமி தங்கக்கருட வாகனத்தில் சனிக்கிழமை பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு பெருமாள் கருட வாகனத்தில் காட்சியளித்த நிகழ்வு அவரது அவதார தினத்தன்று நடைபெற்றுள்ளது.இதன் காரணமாக ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பெரியாழ்வாரின்  அவதார நாளில் காஞ்சிபுரம் வரதராஜசுவாமி தங்கக்கருட வாகனத்தில் ஆண்டு தோறும் வீதியுலா வருவது வழக்கம். 

நிகழாண்டு ஆனி மாத சுவாதி நட்சத்திரத்தையொட்டி காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயிலில் உற்சவர் வரதராஜசுவாமி தங்கக்கருட வாகனத்தில் திருக்கோயில் மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கருடவாகன சேவை நிகழ்வையொட்டி மதூர் முகுந்த ராமானுஜ பாகவதர் உட்பட பல்வேறு பஜனைக் கோஷ்டிகள் பக்தி இன்னிசைப் பாடல்களை பாடியவாறு சுவாமி வீதியுலாவின் போது வந்தனர்.

பக்தர்கள் பலரும் அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ஆர்.ராஜலட்சுமி மற்றும் கோயில் பட்டாச்சாரியார்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு உற்சவர் வரதராஜசுவாமியின் கருட வாகன சேவைக் காட்சியை தரிசித்தனர்.

No comments

Thank you for your comments