Breaking News

திமுகவின் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது... வீழ்ச்சி உறுதி! - அண்ணாமலை பேட்டி


காஞ்சிபுரம், ஜூலை 22: 

ஒவ்வொரு நாளும் திமுகவின் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதில் மக்களும் தெளிவாக இருக்கின்றனர். 

நாட்டிற்காக சிறப்பாக பணியாற்றி வந்த குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் உடல் ஆரோக்கியம் கருதியே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.





பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.அவரை பாஜக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஜெகதீசன் உட்பட கட்சிப்பிரமுகர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சுவாமி தரிசனம் செய்த அண்ணாமலைக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் காமாட்சி அம்மன் திருஉருவப்படம் மற்றும் கோயில் பிரசாதம் ஆகியனவும் வழங்கப்பட்டது.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது..

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் நாட்டிற்காக சிறப்பாக பணியாற்றியவர். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த மார்ச் மாதம் புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

தற்போது உடல் ஆரோக்கியத்திற்காகவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் உடல் நிலை சரியாகி குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

திமுகவின் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது...

ஒவ்வொரு நாளும் திமுகவின் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதில் மக்களும் தெளிவாக இருக்கின்றனர். 

இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் உடைவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவின் வரலாற்றிலேயே இல்லாத அளவு மிக மோசமான தோல்வியை திமுக சந்திக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.பெண்களின் பாதுகாப்பிற்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தவறி விட்டது திமுக.

சென்னை சம்பவம் குறித்து விமர்சனம்:

சென்னையில் ஆட்டோ ஓட்டுநருக்கும்,மக்கள் நீதி மய்யத்தின் பெண் நிர்வாகிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் காவல்துறையினரின் நடவடிக்கை ஒரு தலைப்பட்சமாக இருக்கிறது.

தவறு செய்வது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இருக்கும் ஒரே காரணத்தால் ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

ஆட்டோ ஓட்டுநர்களின் கோபத்தையெல்லாம் காவல்துறையினர் சம்பாதித்துக் கொள்கிறார்கள். எனவே ஒரு தலைப்பட்சமாக காவல்துறையினர் செயல்படக்கூடாது எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

No comments

Thank you for your comments