உபயதாரர்கள் கிடைக்காமல் கோயில் திருவிழாவை நடத்த முடியவில்லை - வழக்கறுத்தீசுவர் கோயில் அலுவலர் தகவல்
காஞ்சிபுரம், ஜூலை 3:

பக்தர்களின் வழக்குகளை தீர்த்து வைக்கும் சிறப்புக்குரியது காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள மருதவார் குழலி சமேத வழக்கறுத்தீசுவர் கோயில்.வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆனி உத்திரத் திருக்கல்யாண பிரமோற்சவம் சிறப்பாக நடைபெற்று வந்தது.
திருவிழாவின் போது காலையிலும், மாலையிலும் உற்சவர்களான சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதியுலா வருவதும் வழக்கம்.
இந்த நிலையில் நிகழாண்டு சுவாமியும், அம்மனும்கோயில் அலங்கார மண்டபத்தில் அலங்காரம் செய்யப்பட்டு ஆலய வளாகத்துக்குள்ளாகவே உலா வருவதோடு விழா நிறைவு பெறுகிறது.வீதியுலா இல்லாமல் நிகழாண்டு திருவிழா நடைபெறுகிறது.
இக்கோயில் வளாகத்தில் உள்ள திருக்குளமும் நீரின்றி வறண்டு கிடக்கிறது.இது குறித்து கோயில் செயல் அலுவலர் தீன்ஷா கூறியது.
திருவிழா நடைபெற்ற போது இருந்த உபயதாரர்களை மட்டுமே அணுகினோம்.பழைய உபயதாரர்களில் சிலர் சுவாமி தூக்குபவர்களுக்கான செலவு,பூஜைப் பொருட்கள், பூக்கள் ஆகியன விலை உயர்வு காரணமாக மண்டகப்படியை நடத்தும் செலவு அதிகமாக உள்ளது என்று கூறி விட்டதால் திருவிழாவை சிறப்பாக நடத்த முடியவில்லை.மிகக் குறுகிய காலமாகவும் இருந்ததால் புதிய உபயதாரர்களையும் அணுகவில்லை.
வரும் ஆண்டுகளில் 3 மாதங்களுக்கு முன்பாகவே ஆலய அறிவிப்பு பலகையில் திருவிழா நடத்துவது பற்றிய விபரம் எழுதி விளம்பரப்படுத்தப்படும். தேவைப்பட்டால் உபயதாரர்களில் பலரையும் இணைத்துக்கொண்டு கோயில் திருவிழாவை சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கோயில் வளாகத்தில் உள்ள திருக்குளத்திற்கு தண்ணீர் வருவதற்கும்,வெளியேறுவதற்கும் வாய்ப்பில்லாமல் இருப்பதால் வறண்டு கிடக்கிறது.மழைக்காலங்களில் தேங்கும் நீரை வைத்தே குளம் நிரம்புகிறது என்றார்.
No comments
Thank you for your comments