Breaking News

வேலூர் மாவட்டத்தில் ஜூன் மாதம் 26 பேர் சாலை விபத்தில் உயிரிழப்பு – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

 வேலூர் :

வேலூர் மாவட்டத்தில் ஜுன் 2025 மாதம் 26 நபர்கள் சாலை விபத்துகளால் உயிரிழந்துள்ளனர் என நடைபெற்ற சாலை பாதுகாப்பு குறித்த மாதந்திர கூட்டத்தில்   மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட மாதந்திர சாலை பாதுகாப்பு குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்   வே.இரா.சுப்புலெட்சுமி  தலைமையில்   30.07.2025 அன்று ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, 

வேலூர் மாவட்டத்தில்  2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மட்டும் மொத்தம் 93 சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இந்த சாலை விபத்துகளில் 75 சாலை விபத்துகள் இருசக்கர வாகன சாலை விபத்துகளாக உள்ளன.

93 சாலை விபத்துகளில் 26 சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் 17 நபர்கள் இருசக்கர வாகன விபத்துகளின் காரணமாக உயிரிழந்துள்ளனர். 8 நபர்கள் சாலை மற்றும் நடைபாதைகளில் செல்லும் பொழுது ஏற்பட்ட சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். ஒரு நபர் மூன்று சக்கர ஆட்டோவில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ஜூன் மாதம் வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சாலை விபத்து எண்ணிக்கைகளை ஆய்வு செய்தபோது பெரும்பாலான சாலை விபத்துகள் இருசக்கர வாகன சாலை விபத்துக்களாகவே உள்ளன. எனவே இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் தலைக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும். போக்குவரத்து சிக்னல் மற்றும் சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும். ஒரு வழி பாதை சாலைகளில் எதிர் திசையில் வாகனங்களை இயக்கக் கூடாது.  

ஜூன் மாதம் சாலை விபத்துகளால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள 26 விபத்துகளில் 16 விபத்துக்கள் தேசிய நெடுஞ்சாலைகளிலும்,  8 விபத்துக்கள் மாநில நெடுஞ்சாலைகளிலும், 2 விபத்து இதர சாலையிலும் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் பெரும்பாலும் ஒரு வழி பாதையில் எதிர் திசையில் வாகனத்தை இயக்கியதன் காரணமாக அதிக விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் ஏற்படும் சாலை விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறையுடன் இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

குறிப்பாக சென்னை-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்ட எல்லையிலுள்ள மேம்பாலங்களில் பக்கவாட்டு சுவரின் உயரம் அதிகரிக்கவும், பேருந்து நிறுத்தம், பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம்கூடும் பகுதிகள் போன்ற  இடங்களில் சாலைகளில் மஞ்சள் நிற வரிபட்டைகள், எச்சரிக்கை குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளன.  மேலும் தேவையற்ற இடங்களில் சாலைகளை கடக்கும் வகையில் தடுப்புகள் களையப்பட்ட இடங்களில் மீண்டும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. 

ஒரு உயிர் என்பது விலை மதிக்கத்தக்கது. எனவே வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கும்போது  சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன், மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா, வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தர்ராஜன், காவல்துறை அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


In June 2025, Vellore district reported 93 road accidents resulting in 26 deaths, most involving two-wheelers. The data was shared by District Collector V.R. Subbulakshmi during a road safety review meeting.

No comments

Thank you for your comments