Breaking News

காஞ்சிபுரம் அருகே பூசிவாக்கத்தில் 1,000 ஆண்டு பழமையான சமண தீர்த்தங்கரர் சிலை கண்டெடுப்பு

 காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பூசிவாக்கம் ஊராட்சியில், ஆயிரம் ஆண்டு பழமையான சமண தீர்த்தங்கரர் சிலை ஒன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) கண்டெடுக்கப்பட்டுள்ளது.


பூசிவாக்கம் ஊராட்சி அலுவலகத்துக்கு அருகிலுள்ள தனியாருக்குச் சொந்தமான ஒரு நிலத்தில் வீடு கட்ட பள்ளம் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டபோது, இந்தப் பழமையான சிலை வெளியாகியுள்ளது.

இதையடுத்து, பூசிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் இந்த தகவலை வாலாஜாபாத் வட்டார வரலாற்று மற்றும் தொல்லியல் ஆய்வு மையத்தின் தலைவர் திரு. அஜய்குமாருக்கு அறிவித்தார்.

அஜய்குமார் மற்றும் அவரது குழுவினர் ஆய்வு செய்தபோது, இது சமண தீர்த்தங்கரர் சிலையாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. அச்சிலை தலைப்பகுதி இல்லாமல், கழுத்து முதல் பீடம் வரை மட்டுமே உள்ளது. சிற்பத்தில் தீர்த்தங்கரர் தியான நிலையில் கால்களை மடக்கி அமர்ந்தபடி, வலது கை இடது கையின் மேல் வைக்கப்பட்டிருப்பது தெளிவாக காணப்படுகிறது.

முதுகு நேராகவும் இடுப்பு வளைவாகவும் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. மேலும், புட்டம் இருபுறமும் வெளிப்படையாக வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும். இது அரிய வகை சிற்பக்கலையை பிரதிபலிக்கிறது.

கருங்கல்லால் செய்யப்பட்ட இந்த சிலை, சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும், 10-ம் நூற்றாண்டு பாணியில் உருவாக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது.

இந்த தகவலை மாநில தொல்லியல் துறையின் உதவி ஆய்வாளர்கள் ரா. ரமேஷ், மே. பிரசன்னா மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் ப.த. நாகராஜன் ஆகியோரும் உறுதி செய்துள்ளனர் என அஜய்குமார் கூறினார்.

No comments

Thank you for your comments