மக்களுக்கு பாதிப்பில்லாமல் ரயில் கட்டணம் உயர்த்தப்படும் - மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா
காஞ்சிபுரம், ஜூன் 27:
காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் இது குறித்து மேலும் கூறியதாவது,
இந்தியாவிலேயே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் ரயில் நிலையம் சரக்குகளை அதிகமாக கையாண்டதில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ரயில்வேக்கு ரூ.680 கோடி வரை வருமானம் பெற்றுத் தந்துள்ளது.
சென்னை முதல் வாலாஜாபாத் ரயில் நிலையம் வரை ஒருவழிப்பாதையாக இருப்பதை இரு வழிப் பாதையாக மாற்றினால் சரக்குகள் மூலம் வரும் வருமானமும்,அதிக பயணிகள் செல்லும் வசதி ஏற்படுவதால் ரயில் பயணிகள் மூலமாகவும் வருமானம் அதிகரிக்கும். எனவே சென்னை முதல் அரக்கோணம் வரையுள்ள ஒருவழிப்பாதையை இருவழிப்பாதையாக மாற்ற துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனாவுக்குப் பிறகு அனைத்துக் கட்டணங்களுமே உயர்ந்து விட்டன.ஆனால் ரயில் கட்டணம் மட்டும் உயர்த்தப்படாமல் இருந்து வந்தது.தற்போது ரயில் கட்டணம் மக்களுக்கு பாதிப்பில்லாமல் உயர்த்தப்படும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் ரயில் நிலையம் நவீனப்படுத்தப்படும்.காஞ்சிபுரம் முதல் சென்னை மற்றும் சென்னை முதல் காஞ்சிபுரம் வரை இயக்கப்பட்டு வந்த வட்டவடிவ ரயில் பாதையை மீண்டும் தொடங்கவும்,காஞ்சிபுரத்தில் ரயில் டிக்கட்டுகள் முன்பதிவு மையம் ஏற்கனவே இருந்தது போல இரவு 8 மணி வரை தொடரவும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இந்திரா நகர் சுரங்கப்பாதை பணியும் விரைவில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார்.முன்னதாக காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்திற்கு சிறப்பு ரயிலில் வந்த அமைச்சரை பாஜக மாவட்ட தலைவர் ஜெகதீசன், துணைத் தலைவர் ஓம்.சக்தி.பெருமாள், பொதுச்செயலாளர் பரந்தாமன், செய்தித் தொடர்பாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பேட்டியின் போது சென்னை கோட்ட பொது மேலாளர் ஈரய்யா,பாஜக மூத்த நிர்வாகி மோகன்லால், ராஜேஷ்,ரயில் பயணிகள் சங்க செயலாளர் ஜெ.ரங்கநாதன், ஆலோசனைக்குழு உறுப்பினர் தெ.தமிழ்ச்செல்வன் ஆகியோர் உட்பட பலரும் உடன் இருந்தனர். ஆய்வுக்குப் பின்னர் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மற்றும் காமாட்சி அம்மன் கோயில்களிலும் சுவாமி தரிசனம் செய்தார்.
No comments
Thank you for your comments