காஞ்சிபுரம் திரும்பிய சங்கராசாரியாருக்கு உற்சாக வரவேற்பு
காஞ்சிபுரம், மார்ச்.10:
திருவானைக்காவல் அகிலாண்டேசுவரி அம்மனுக்கு தங்கத்தாடங்கம் பிரதிஷ்டை செய்து விட்டு காஞ்சிபுரம் திரும்பிய சங்கராசாரியார் சுவாமிகளுக்கு நகர எல்லையில் பொதுமக்கள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70 வது பீடாதிபதியாக இருந்து வருபவர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவர் திருச்சியில் உள்ள திருவாணைக்காவல் அகிலாண்டேசுவரி அம்மனுக்கு தங்கத்தாடங்கம் பிரதிஷ்டை செய்வதற்காக சென்றிருந்தார். அந்நிகழ்வை நிறைவு செய்த பின்னர் காஞ்சிபுரம் திரும்பினார்.
காஞ்சிபுரம் நகர எல்லையான சர்வதீர்த்தக்குளம் அருகில் உள்ள சித்தீஸ்வரர் ஆலயத்தின் முன்பாக காஞ்சி நகர வரவேற்பு கமிட்டி சார்பில் அதன் நிர்வாகிகள் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானீகர்கள் சுவாமிகளுக்கு கோயில் பிரசாதம் வழங்கினார்கள்.பின்னர் காஞ்சிபுரம் சங்கரமடத்துக்கு வந்ததும் மடத்தின் சார்பில் அதன் செயலாளர் சல்லா.விஸ்வநாத சாஸ்திரி,மேலாளர் ந.சுந்தரேச ஐயர் ஆகியோர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.
இதன் தொடர்ச்சியாக சங்கர மடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களில் தரிசனம் செய்து விட்டு பக்தர்களுக்கும் அருளாசி வழங்கினார்.
No comments
Thank you for your comments