Breaking News

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.5.90 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரம்  :

 காஞ்சிபுரம் வட்டம்,  அத்திவாக்கம் கிராமத்தில் இன்று (15.03.2025) நடைபெற்ற  மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 267 பயனாளிகளுக்கு ரூ.5.90 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம் ஆகியோர் வழங்கினார்கள்.


நமது மாவட்டத்தில் இயங்கி வரும் வருவாய் துறை,  ஊரக வளர்ச்சித் துறை,   மாற்றுத்திறனாளி நலத்துறை,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழில்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத் துறை,  சமூக நலன் மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட துறைகளின் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் விவரங்கள் குறித்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.

இத்திட்டங்கள் குறித்த விவரங்கள்  அனைத்தும்  இங்கு  அமைக்கப்பட்டு   உள்ள   துறை  சார்ந்த அரங்குகளில்  பொதுமக்கள்  தெரிந்து  கொள்ளும்  வகையில்  வைக்கப்பட்டுள்ளது.   மேலும் திட்டங்களின் விவரங்கள்  பற்றிய  சந்தேகம்  ஏதேனும்  இருப்பின்  துறை  சார்ந்த  அலுவலர்களிடம் கேட்டறிந்து தங்களின்          வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி  கொள்ளலாம். 

இன்று மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெறுவதை முன்னிட்டு 06.03.2025 முதல் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டு மனைப் பட்டா,  குடும்ப அட்டை தொடர்பான மனுக்கள், கடன் உதவிகள், இலவச தையல் இயந்திரம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 186 மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் உரிய முறையில் தீர்வு காணப்பட்டு, 267 தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு ரூ.590.38 (ரூபாய் ஐந்து கோடியே தொண்ணூறு இலட்சத்து முப்பத்தெட்டாயிரம் மட்டும்) மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படடன.

பெறப்பட்ட மனுக்களில், வருவாய்த் துறை மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா - 134 நபர்களுக்கும், குடும்ப அட்டை நகல் மற்றும் புதிய  குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) – 35 நபர்களுக்கும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரண நிதி உதவித்தொகை – 11 நபர்களுக்கும்,  சுகாதாரத்துறை மூலம்  ஊட்டச்சத்து பெட்டகம்  -  05  நபர்களுக்கும்,  ஊரக வளர்ச்சித் துறை  மூலம்  மகளிர் சுய உதவிக் குழு வங்கிக்கடன் – 02  நபர்களுக்கும்,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம்  தையல் இயந்திரம்  - 05 நபர்களுக்கும்,  பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் இலவச சலவைப் பெட்டி - 05  நபர்களுக்கும் மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்திற்கு  (சுய தொழில் கடன்) – 25  நபர்களுக்கும், வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் இடுப்பொருள் மானியம் – 22  நபர்களுக்கும், கூட்டுறவுத் துறை மூலம் மகளிர் சுய உதவிக் குழுக் கடன் – 03  நபர்களுக்கும், தாட்கோ மூலம் – தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர் அடையாளச் சான்று – 20 நபர்களுக்கும்  என மொத்தம்  267 பயனாளிகளுக்கு  ரூ.5.90 கோடி   மதிப்பிலான  நலத்திட்ட  உதவிகளை  மாவட்ட   ஆட்சித் தலைவர் அவர்கள்  வழங்கினார்கள்.

இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்று மாலை வரை நடைபெறவுள்ளது எனவும், பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான திட்டங்களை சம்பந்தப்பட்ட துறை வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரங்கிற்கு சென்று பார்வையிட்டு திட்டங்களை தெரிந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்  கொண்டார்.

தொடர்ந்து  மக்கள் தொடர்பு திட்ட முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற சிங்காடிவாக்கம் கிராமத்தை சேர்ந்த திருமதி. கஸ்தூரி அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில்“நிறைந்தது மனம்” திட்டத்தின்கீழ் தனது நன்றியினை தெரிவிக்கையில்:

என் பெயர் கஸ்தூரி, காஞ்சிபுரம் சிங்காடிவாக்கம் கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. நாங்கள் குளம், குட்டை, ஏரி ஆகிய பகுதிகளில் வாழ்ந்து வந்த நிலையில் எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கி மற்றும் வீடுகளையும் கட்டி கொடுத்து, எங்களையும்  நிரந்தரமாக ஒரு வீட்டில் வசிக்க வைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எங்கள் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் எங்கள் குறைகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனு மூலம் தெரிவித்தோம். எங்கள் கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுத்து, எங்கள் வாழ்க்கை தரத்தினை உயர்த்திய  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. க.ஆர்த்தி, சார் ஆட்சியர் திரு.ஆஷிக் அலி, இ.ஆ.ப., வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் திரு.ஆர்.கே.தேவேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் அத்திவாக்கம் திரு.எம்.குமார்,  அத்திவாக்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திரு.டி.விஜயகாந்த், உள்ளாட்சி  மன்ற  பிரதிநிதிகள்  மற்றும்  அரசு  அலுவலர்கள்  கலந்துக் கொண்டனர்.

தொடர்ந்து அத்திவாக்கம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, கிராமத்தில் செயல்பட்டுவரும் நியாய விலைக்கடையினை பார்வையிட்டு, பொருட்களின் இருப்பு பதிவேடு மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரத்தினையும் ஆய்வு மேற்கொண்டார்கள்.

No comments

Thank you for your comments