Breaking News

செய்யாற்றின் குறுக்கே ரூ.19 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம்-எம்எல்ஏ சுந்தர் அடிக்கல் நாட்டினார்

 காஞ்சிபுரம், பிப்.12:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இளையனார் வேலூருக்கும்,நெய்யாடுபாக்கத்திற்கும் இடையே செய்யாற்றின் குறுக்கே ரூ.19 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் புதன்கிழமை அடிக்கல் நாட்டினார்.



காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டாரம் இளையனார்வேலூர் கிராமத்திற்கு உட்பட்ட வள்ளிமேடு,சித்தாத்தூர், இளையனார்வேலூர்,காவாந்தண்டலம் உள்ளிட் பல்வேறு பகுதிகளிலிருந்து நெய்யாடுபாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தினசரி 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள்,பொதுமக்கள் செய்யாற்றைக் கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.

பருவமழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் செய்யாற்றை கடக்க இயலாத நிலையில் பள்ளி மாணவர்கள், ஒரகடம்,ஸ்ரீபெரும்புதூர்,தாம்பரம் உள்ளிட் பகுதிகளில் பணிபுரியும் இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோரும் செய்யாற்றை கடக்க இயலாத நிலை உள்ளது.

இது குறித்து பலரும் செய்யாற்றின் குறுக்கே உயர்மட்டமேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.இது குறித்து உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தரும் சட்டப்பேரவையில் பேசியதையடுத்து அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.19 கோடி நிதி ஒதுக்கியிருந்தார். 

இதனைத் தொடர்ந்து 300 மீ. நீளம் கொண்ட உயர்மட்ட மேம்பாலம் செய்யாற்றின் குறுக்கே அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் மேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் விஜய்,திமுக ஒன்றிய செயலாளர் குமார் உட்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,திமுக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments