வேலூரில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
வேலூர்:
![]() |
அமைச்சர் துரைமுருகன், எம்.பி. வீட்டில் இல்லாததால் காத்திருக்கும் அமலாக்கத் துறை அதிகாரிகள். |
4 இடங்களில் சோதனை
வேலூரில் தமிழக நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று (வெள்ளிக்கிழமை) சோதனை நடத்தி வருகின்றனர். காட்பாடி காந்திநகரில் உள்ள அமைச்சரின் வீடு, மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகம், அமைச்சரின் நம்பிக்கைக்குரிய பூஞ்சோலை சீனிவாசன் அவரது உறவினர் வீடு உள்பட 4 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
காலை ஏழு மணிக்கு துரைமுருகன் இல்லத்தில் வந்த அமலாக்கத்துறையினர், வீட்டில் யாரும் இல்லாததால், முகப்பு கேட்டைக் கடந்து சென்று திண்ணையில் காத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அமைச்சர் துரைமுருகனும், அவரது மகனும் மக்களவை உறுப்பினருமான கதிர் ஆனந்தனும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீட்டில் தற்போது சுமார் 10 மத்திய ரிசர்வ் படை பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
![]() |
அமைச்சர் துரைமுருகன் இல்லத்தின் வெளியே கூடியுள்ள திமுகவினர் |
இந்நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் அமைச்சர் துரைமுருகனை சந்தித்த செய்தியாளர்கள், அமலாக்கத்துறை சோதனை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்,
“இந்த சோதனை குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ, அவ்வளவுதான் எனக்கும் தெரியும். இந்த சோதனைக்கு யார் வந்துள்ளார்கள் என்பது தெரியவில்லை.
யாரும் வீட்டிலும் இல்லை. இரண்டு பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களுக்கு சோதனை செய்ய வந்திருப்பவர்கள் எந்த துறையைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள்கூட தெரியாது. எனவே பணியாளர்களுக்கு சரியாக எதுவும் சொல்லத் தெரியவில்லை. காட்பாடி சென்றபிறகுதான் சோதனை குறித்த விவரம் தெரியவரும்,” என்று அவர் கூறினார்.
மேலும், வரும் ஜன.6ம் தேதி, தமிழக சட்டமன்றம் கூடவுள்ளது. இதையொட்டி இந்த ஆண்டில் முதல்முறையாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்துக்கு இன்று வந்திருந்தார். அங்கு முதல்வரைச் சந்தித்து அமைச்சர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர் துரைமுருகனும் தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்துப் பேசினார். அப்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நிகழ்வுகள் மற்றும் அமலாக்கத்துறை சோதனை குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
சோதனையின் பின்னணி என்ன?
தமிழகத்தில் கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார். தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்ற புகாரின்பேரில் 2019 மார்ச் 29-ம் தேதி இரவு தொடங்கி மறுநாள் (மார்ச் 30) வரை துரைமுருகனின் வீடு மற்றும் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், துரைமுருகன் வீட்டில் இருந்து 10 லட்சத்து 57 ஆயிரத்து 10 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.11.51 கோடி பணம் பறிமுதல்..
இதற்கிடையில், ஏப்ரல் 1-ம் தேதி சென்னையில் இருந்து துணை ராணுவப்படை பாதுகாப்புடன் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் துரைமுருகனின் நெருங்கிய கட்சிப் பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் அவரது உறவினருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோன் உள்ளிட்ட 6 இடங்களில் மீண்டும் நடத்திய சோதனையில் மூட்டை மூட்டையாகவும் பெட்டி பெட்டியாகவும் 11 கோடியே 51 லட்சத்து 800 ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர்.
![]() |
வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள். |
அப்போது, வேலூர் மக்களவைத் தொகுதி வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் விவரங்களுடன் கூடிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் சுமார் ரூ.9 கோடி அளவுக்கு புத்தம் புதிய 200 ரூபாய் நோட்டுகள் இருந்தன. தேர்தல் நேரத்தில் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் காட்பாடி காந்தி நகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் செஸ்ட் பிராஞ்சில் (வங்கிகளுக்கு இடையில் மட்டும் பணப்பரிமாற்றம் செய்யும் கிளை) இருந்து பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.
வழக்குப் பதிவு:
வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக காட்பாடி காவல் நிலையத்தில் தேர்தல் செலவுக் கணக்கு அதிகாரி முத்து சிலுப்பன் அளித்த புகாரின்பேரில் கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. முறைகேடாகப் பணம் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் பூஞ்சோலை சீனிவாசனிடம் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று சோதனை :
இந்நிலையில் இதன் நீட்சியாக அமலாக்கத் துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. காந்திபுரத்தில் உள்ள அமைச்சரின் வீடு, மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகம், அமைச்சரின் நம்பிக்கைக்குரிய பூஞ்சோலை சீனிவாசன் அவரது உறவினர் வீடு உள்பட 4 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
சட்டவிரோத மணல் குவாரிகள்:
இதுஒருபுறம் இருக்க சட்டவிரோத மணல் குவாரிகள் விவகாரம் தொடர்பாகவும் அமலாகத் துறை சோதனை செய்யலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, சட்ட விரோத மணல் கொள்ளை விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர், அரியலூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராகினர்.
அப்போது தொட்டே இவ்விவகாரத்தில் அமைச்சர் துரை முருகன் மீது அமலாக்கத் துறை விசாரணை பாயும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றைய சோதனை நடைபெறுகிறதா என்ற பேச்சுக்களும் எழுந்துள்ளது.
பலத்த பாதுகாப்பு :
வேலூரில் உள்ள துரைமுருகன், கதிர் ஆனந்த் வீட்டின் முன்பாகத் தொண்டர்கள் கூடியிருப்பதால், மாவட்ட இணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து, பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
No comments
Thank you for your comments