மகா கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து - அலறி ஓடிய பக்தர்கள்
பிரயாக்ராஜ், ஜன.19-
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம். திரிவேணி சங்கத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்ப மேளா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா நிகழ்வை கோலாகலமாக நடத்துகிறது உத்தர பிரதேச அரசு.
ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி வரை வரை நடைபெறும். பல கோடி பேர் இந்த ஆண்டு கும்பமேளாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வரும் நிலையில், சாஸ்திரி பாலம் பகுதியில் செக்டார் 19ல் திடீரென இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சமையல் சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தீ மளமளவென எறிந்து மற்ற இடங்களுக்கு வேகமாக பரவியது. தொடர்ந்து, அருகில் உள்ள கூடாரங்களில் வசித்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தீவிபத்தால் ஏற்பட்ட கரும்புகையினால் அப்பகுதி புகைமூட்டமாகக் காட்சியளித்தது.
உடனடியாக தீயணைப்புத் துறைக்க தகவல் தெரிவிக்கப்பட்டது. அருகில் நிறுத்தப்பட்டு இருந்த தீயணைப்பு வாகனங்கள் விரைந்து செயல்பட்டு போர்க்கால வேகத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் பயப்படவேண்டிய அவசியம் இல்லை என்று உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுமார் 20 முதல் 25 கூடாரங்கள் எரிந்து நாசமானது. மகா கும்பமேளாவின் செக்டார் 19 இல் 2 சிலிண்டர்கள் வெடித்ததால், முகாம்களில் பெரிய தீ ஏற்பட்டது என அகரா காவல் நிலையப் பொறுப்பாளர் பாஸ்கர் மிஸ்ரா தெரிவித்துள்ளார். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படையின் (ழிஞிஸிதி) பணியாளர்களும் களத்தில் உள்ளனர்.
மகா கும்பமேளா 2025-ன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில்,
“மகா கும்பமேளாவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து மிகவும் வருத்தத்தைத் தருகிறது. கும்பமேளா நிர்வாகம் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை உறுதி செய்து வருகிறது. அனைவரது பாதுகாப்புக்காகவும் நாங்கள் கங்கை அன்னையை பிரார்த்தனை செய்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து அடர்த்தியான கரும்புகை மேலெழும் வீடியோவையும் பகிர்ந்துள்ளது.
விபத்து குறித்து ஏடிஎம் மேளா, விவேக் சதுக்வேதி கூறுகையில், “துரதிருஷ்டவசமாக கீதை பத்திரிக்கை முகாமில் இருந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. 70-80 குடிசைகள், 8-10 கூடாரங்கள் எரிந்துள்ளதாக தெரிகிறது. உயிரிழப்புகள் எதுவும் இல்லை. அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தீ அணைக்கப்பட்டுள்ளது.” என்றார்.
இதனிடையே விபத்து குறித்து அறிய மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.
இந்த விபத்தால் கூடாரங்களில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் பல, எரிந்து சாம்பலாகின. இந்த தீ விபத்தில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
No comments
Thank you for your comments