5 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - இரு அமைச்சர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
காஞ்சிபுரம், ஜன.21:
காஞ்சிபுரம் வட்டாரத்தில் ஆசூர்,ஆற்பாக்கம்,மாகறல் மற்றும் உத்தரமேரூர் வட்டாரத்தில் பெருநகர்,அரும்புலியூர் ஆகிய 5 ஊராட்சிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் அமைச்சர்கள் ஆர்.காந்தி,சி.வி.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக 30 மற்றும் 2 வது கட்டமாக 54 உட்பட மொத்தம் 84 மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இம்முகாம்களில் மொத்தம் 25140 கோரிக்கை மனுக்கள் ஏற்கப்பட்டு அவற்றில் 91 சதவிகித மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டிருந்தது.3 வது கட்டமாக ஜன.21 செவ்வாய்க்கிழமை முதல் வரும் ஜன.24 ஆம் தேதி வரை 20 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வட்டாரத்தில் ஆசூர், ஆற்பாக்கம், மாகறல் மற்றும் உத்தரமேரூர் வட்டாரத்தில் அரும்புலியூர், பெரும்பாக்கம் ஆகியன உட்பட மொத்தம் 5 ஊராட்சிகளில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் 3 வது கட்டமாக தொடங்கியது.
இம்முகாம்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார்.காஞ்சிபுரம் எம்பி க.செல்வம்,எம்எல்ஏ க.சுந்தர்,மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
5 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் 15 வகையான அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்று 49 வகையான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் 5 ஊராட்சிகளுக்கும் சென்று பயனாளிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டதுடன் நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
இலவச வீட்டு மனைப் பட்டா,முதியோர் உதவித்தொகை,இலவச வீடு,கலைஞர் மகளிர் உரிமைத் தொகை,குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனங்கள் ஆகியனவற்றை அமைச்சர்கள் ஆர்.காந்தி, சி.வி.கணேசன் இருவரும் இணைந்து வழங்கினார்கள்.
முகாமில் 1739 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதில் 155 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில் காஞ்சிபுரம் சார் ஆட்சியர் ஆஷிக் அலி, உத்தரமேரூர் ஒன்றியக் குழுவின் தலைவர் ஹேமலதா ஞானசேகர்,காஞ்சிபுரம் ஒன்றியக் குழுவின் தலைவர் மலர்க்கொடி குமார் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments