3 ஆயிரம் கிலோ எடை கரும்புகளால் செய்யப்பட்ட மாட்டு வண்டி, மாடுகள்! - காஞ்சிபுரம் அருகே பாஜக பிரமுகர் கொண்டாடிய பொங்கல் விழா
காஞ்சிபுரம், ஜன.15:
காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிர்ப்பூரில் பொங்கல் பண்டிகையையொட்டி செவ்வாய்க்கிழமை 3 ஆயிரம் கிலோ எடையிலான கரும்புகளால் மாட்டு வண்டி மற்றும் மாடுகளின் உருவங்களை பாஜக மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார் உருவாக்கி பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
காஞ்சிபுரம் மாவட்ட பாஜக துணைத்தலைவராக இருந்து வருபவர் ஆ.செந்தில்குமார். இவர் தனது சொந்த ஊரான காஞ்சிபுரம் அருகேயுள்ள கீழ்க்கதிர்ப்பூரில் ஆண்டு தோறும் வேளாண்மையில் விழிப்புணர்வு ஏற்டுத்துவதற்காக கரும்புகளால் ஆன உருவங்களை உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
நிகழாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி கீழ்க்கதிர்ப்பூரில் உள்ள அவருக்கு சொந்தமான வயலில் 3 ஆயிரம் கிலோ எடையிலான கரும்புகளால் ஒரு ஜோடி மாடுகள் மற்றும் விவசாய பொருட்களை ஏற்றிச் செல்ல உழவர்களுக்கு பயன்படும் மாட்டு வண்டி ஆகியனவற்றை உருவாக்கியுள்ளார்.
பின்னர் தனது குடும்பத்தினருடன் இணைந்து சூரிய உதயத்தின் போது பொங்கல் வைத்து கொண்டாடினார்.
இது குறித்து ஆ.செந்தில்குமார் கூறுகையில்
தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகளுக்கு தேவைப்படும் பொருட்களை கரும்புகளால் செய்து பொங்கல் திருநாளன்று விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி உருவம், பொங்கல்பானை,காளை மாடுகள் ஆகியனவற்றை உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.
நிகழாண்டு பழமையான மாட்டு வண்டியை மக்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காக 3 ஆயிரம் கிலோ எடையில் மாட்டு வண்டியும்,ஒரு ஜோடி மாடுகளும் கடந்த ஒரு வாரமாக உருவாக்கப்பட்டு பொங்கல் விழாவை கொண்டாடினோம் என்றார்.
No comments
Thank you for your comments