இரண்டு நாள் பயணமாக குவைத் புறப்பட்டார் பிரதமர் மோடி
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக குவைத் புறப்பட்டார். 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் குவைத் செல்வது இதுவே முதல்முறை.
குவைத் பயணத்துக்கு முன்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், “குவைத் நாட்டின் அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாஹ் அவர்களின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் பயணமாக குவைத் செல்கிறேன்.
குவைத்துடன் பல தலைமுறைகளாகப் பேணி வரும் வரலாற்றுத் தொடர்பை நாங்கள் ஆழமாக மதிக்கிறோம். இந்தியாவும் குவைத்தும் வலுவான வர்த்தகம் மற்றும் எரிசக்தி கூட்டாளிகள் மட்டுமல்ல. மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றில் ஆர்வத்தை பகிர்ந்து கொண்டுள்ளோம்.
குவைத்தின் அமிர், பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமருடனான எனது சந்திப்புகளை எதிர்பார்க்கிறேன். நமது மக்கள் மற்றும் நமது பிராந்தியத்தின் நலனுக்கு ஏற்ற எதிர்கால திட்டங்களுக்கான வரைபடத்தை உருவாக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.
இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதில் பெரும் பங்காற்றிய குவைத்தில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
வளைகுடா பிராந்தியத்தில் முதன்மையான விளையாட்டு நிகழ்வான அரேபியன் வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவுக்கு என்னை அழைத்ததற்காக குவைத் தலைமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தடகள சிறப்பையும் பிராந்திய ஒற்றுமையையும் கொண்டாடும் இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதை நான் எதிர்நோக்குகிறேன்.
இந்த பயணம் இந்தியா மற்றும் குவைத் மக்களுக்கு இடையேயான சிறப்பான உறவுகளையும் நட்புறவையும் மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்." என தெரிவித்துள்ளார்.
சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்தின் ஆட்சி இரண்டு வாரங்களுக்கு முன்பு கவிழ்ந்தது. இதேபோல், காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த பின்னணியில் பிரதமர் மோடியின் குவைத் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. கடைசியாக பிரதமர் இந்திரா காந்தி 1981-ல் குவைத் சென்றார். அதன் பிறகு அந்நாட்டுக்குச் செல்லும் முதல் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments