செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு - பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்த மாணவர்கள்
காஞ்சிபுரம், டிச.2:
பென்ஜால் புயல் காரணமாக கடந்த 3 தினங்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக செய்யாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது.
செய்யாற்றின் கரையோரம் உள்ள நெய்யாடுபாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் வள்ளிமேடு,இளையனார்வேலூர், காவாந்தண்டலம் கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் இளையனார் வேலூரிலிருந்து நெய்யாடுபாக்கம் பள்ளிக்கு செல்ல செய்யாற்றை கடந்து செல்ல வேண்டியுள்ளது.
செய்யாற்றை கடக்காமல் சென்றால் சுமார் 15 கி.மீ. சுற்றி நெய்யாடுபாக்கம் பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்படும். போதிய பேருந்து வசதிகளும் இல்லை.
வெள்ளப்பெருக்கால் பள்ளிக்கு செல்ல இயலாத நிலையில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுரையின்படி இளையனார் வேலூர் கிராம சேவைக் கட்டிடத்தில் தற்காலிக பள்ளி வகுப்புகள் நடத்த கேட்டுக் கொண்டார்.
இதன்படி இளையனார் வேலூரில் பள்ளி மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வீடுகளுக்கு திரும்பினார்கள்.
ஆண்டு தோறும் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பள்ளிக்கு செல்ல முடியாத நிலை தொடர்ந்து 20 ஆண்டுகளாக இருந்து வருகிறது.
விரைவில் இப்பகுதியில் உயர்மட்டப்பாலம் அமைக்க வேண்டும் என கிராமத்தினர் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தரும் உயர் மட்ட பாலம் அமைக்க ஏற்பாடு செய்து வருவதாக கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments