காஞ்சிபுரத்தில் சாலைகளை உடனுக்குடன் சீரமைத்த நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள்
காஞ்சிபுரம், டிச.2:
பென்ஜால் புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து கொண்டே இருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.கனமழைக்கு 16 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.23 குடிசை வீடுகள் மற்றும் 225 ஹெக்டேர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன.
பல்வேறு பகுதிகளில் 14 மின்கம்பங்கள் சேதமடைந்து அவற்றை மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சீரமைத்தனர். காஞ்சிபுரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைக்கு நீர் தேங்கி நிற்பதாகவும், சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் 104 புகார்கள் வரப்பெற்றதில் 84 புகார்கள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டன.
காஞ்சிபுரத்தில் சங்கர மடம் சாலை, தாமல்வார்தெரு, வள்ளல் பச்சையப்பன்தெரு, வந்தவாசி சாலை ஆகிய பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஜெசிபி உதவியுடன் உடனுக்குடன் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சாலையோரங்களில் மழைநீர் வடிகால் பகுதிகளில் தேங்கியிருந்த கழிவுகளையும் அகற்றினர். சாலைகளில் விழுந்து கிடந்த 14 மரங்கள் தீயணைப்புத்துறையினரால் அகற்றப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 23 நிவாரண முகாம்களில் 564 நபர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
No comments
Thank you for your comments