முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - நே.ஜ.யூ. தலைவர் டாக்டர் கா.குமார் புகழஞ்சலி
புதுடெல்லி, டிச.27-
வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த மன்மோகன் சிங் வியாழக்கிழமை (டிச.26) இரவு 9.51 மணிக்கு உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
2004 முதல் 2014 வரை இந்திய நாட்டின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், இந்த ஆண்டு தொடக்கத்தில் ராஜ்யசபாவில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தியாவின் ஒரே சீக்கிய பிரதமராக இருந்த மன்மோகன், நரசிம்ம ராவ் அமைச்சரவையில் 1991-ல் நிதியமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
பஞ்சாபில் 1932 செப்டம்பர் 26-ல் பிறந்த மன்மோகன் சிங், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர். 1957-ல் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார மேற்படிப்பை முடித்த அவர், இதைத் தொடர்ந்து 1962-ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டி.ஃபில் பட்டம் பெற்றார்.
பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஆகியவற்றில் ஆசிரியராக பணியாற்றிய மன்மோகன் சிங் 1971-ல் மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தில் பொருளாதார ஆலோசகராக இணைந்தார். அடுத்த ஆண்டே நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக பதவி உயர்வு பெற்றார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு இந்திய அரசியல் வட்டாரத்தில் , நாடும் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் புகழஞ்சலி செய்தியில்,
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார், அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், மன்மோகன் சிங் அவர்களின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை நினைவுகூறி புகழஞ்சலி செய்தி வெளியிட்டார்.
அதில், "மன்மோகன் சிங் அவர்கள் இந்தியாவின் வளர்ச்சியின் அடித்தளம் அமைத்த தகுதி மிக்க பொருளாதார நிபுணரும் அரசியல் தலைவரும் ஆவார். அவரது வழிகாட்டுதலின் மூலம், 1991 இல் நாடு மிகப்பெரிய பொருளாதார சிக்கல்களிலிருந்து மீண்டு வந்தது. இந்தியாவை ஒரு வலுவான பொருளாதார சக்தியாக மாற்றுவதில் அவரது பங்கிற்கு நாம் எப்போதும் நன்றியுடனும் மரியாதையுடனும் நினைவுகூர வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
"மனிதநேயத்துடன் கூடிய ஒரு தலைவராக இருந்தவர். அரசியலில் தூய்மையும் நேர்மையும் கொண்ட முன்னோடியாக விளங்கிய இவர், எளிமையும் தன்னலமின்மையும் நிறைந்தவர். அவரின் துன்புறவுகளைக் கேட்டறியும் மனப்பான்மையும், ஒப்பந்தங்களை திறந்த மனதுடன் நடத்தும் தன்மையும், இந்த தேசத்திற்கே தனி பெருமை சேர்த்தது" எனக் குறிப்பிட்டார்.
மேலும், "அவருடைய மறைவு ஒரு பாரிய இழப்பு. அவரின் அறிவாற்றல், ஒழுக்க நெறிகள் மற்றும் பணிவான நடைமுறை அரசியல் உள்நாட்டுத் தலைவர்களுக்குப் பெரிய முறை பாடமாகும். அவரது குடும்பத்தினருக்கும் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று கூறினார்.
மன்மோகன் சிங் அவர்கள் இந்திய அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் ஆழ்ந்த பணி ஆற்றியவர் என்பதை உலகமே ஏற்றுக்கொண்டு வருவதாகவும், அவரது மறைவால் நாம் அனைவரும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளதாகவும் டாக்டர் கா.குமார் உணர்ச்சியோடு தனது இரங்கலை தெரிவித்தார்.
No comments
Thank you for your comments