Breaking News

காஞ்சிபுரத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க டிச.5 வரை தேதி நீட்டிப்பு - இணைப்பதிவாளர் தகவல்

காஞ்சிபுரம், நவ.30:

கூட்டுறவுத்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கும் தேதி வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப் பதிவாளர் பா.ஜெயஸ்ரீ சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இது குறித்து இணைப் பதிவாளர் பா.ஜெயஸ்ரீ  கூறியதாவது:-

முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விருப்பமுள்ள பி.பாம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்.

தகுதி உடையவர்கள்  http://www.mudhalvarmarundhagam.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.விருப்பம் உடையவர்கள் நவ.30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது பொதுமக்கள் நலன் கருதி வரும் 5 ஆம் தேதி வியாழக்கிழமை வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியம் ரூ.3 லட்சம் இரு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும். 

தொழில் முனைவோர் கூடுதல் நிதி தேவைப்பட்டாலும் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெறவும் வழிவகை செய்து தரப்படும்.  தாட்கோ, டாப்செட்கோ, தாம்கோ பயனாளிகளும் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சியளித்து முதல் தவணை மானியத்தொகை ரூ.1.50லட்சம் விடுவிக்கப்படும்.தேர்வு செய்யப்படும் தொழல் முனைவோர்களுக்கு மருந்தகம் அமைக்க உட்கட்டமைப்பு வசதிகளான குளிர்சாதனப்பெட்டி, ரேக்குகள், ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டி ஆகியன நிறுவப்பட்ட பிறகு இறுதிக் கட்ட மானியம் ரூ.1.50 லட்சம் செலவில் மருந்துகளாக வழங்கப்படும்.

விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகையும் வழங்கப்பட இருப்பதாலும், தகுதியுள்ள அனைவரும் இந்த அரிய வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் பா.ஜெயஸ்ரீ கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments

Thank you for your comments