Breaking News

காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயிலில் கடைஞாயிறு விழா தொடக்கம்

காஞ்சிபுரம், நவ.17:

காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயிலில் கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி தலையில் எந்த வித நோய்களும் வராமல் இருக்க மண்சட்டியில் மாவிளக்கு ஏற்றி ஏராளமான பக்தர்கள் கோயிலை வலம் வந்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.


பெருமாள் ஆமை வடிவில் சிவபெருமானை வணங்கிய பெருமைக்குரியது காஞ்சிபுரம் கச்சபேசுவரர் திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகள் முழுவதும் பக்தர்கள் தங்கள் தலையில் மண்சட்டியில் மாவிளக்குடன் கூடிய அகல்விளக்கு ஏற்றி ஆலயத்தை வலம் வந்து நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.

இவ்வாறு செய்வதால் தலையில் எந்த வித நோய்களும் வராமலிருக்கவும், தலை சார்ந்த நோய்களை தீர்க்கவும் தலையில் மண்சட்டியில் அகல்விளக்குடன் கோயிலை வலம் வருவது ஐதீகம்.

நிகழாண்டு கார்த்திக மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஏராளமான பக்தர்கள் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தையும்,அதன் அருகில் உள்ள நாகர் சிலைகளையும் வழிபட்டனர். பின்னர் ஆலய வளாகத்தில் மாவிளக்கு ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து மண்சட்டியில் மாவிளக்குடன் கூடிய அகல்விளக்கை ஏற்றியவாறு ஆலயத்தினை வலம் வந்து வழிபட்டனர்.

கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் ஆலய செயல் அலுவலர் நாகராஜன், மேலாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் பக்தர்கள் வரிசையாக செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பக்தர்கள் ரூ.10, ரூ.20 கட்டணம் செலுத்தியும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோயில் பூஜகர் இஷ்டசித்தி பிரபாகர் குருக்கள் தலைமையில் கச்சபேசுவரருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

மூலவர் கச்சபேசுவரர் மலர் அலங்காரத்திலும்,அஷ்டபுஜ சரஸ்வதி வெள்ளிக்கவச அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவில் செங்குந்த முதலியார் சங்க தலைவர் எம்.சிவகுரு,திருப்பணிக்குழுவின் தலைவர் பெருமாள் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.கார்த்திகை மாதத்தில் வரும் மற்ற ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடை ஞாயிறு விழா நடைபெறவுள்ளது.

No comments

Thank you for your comments