பணியிலிருந்த அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து - விரிவான விசாரணைக்கு முதல்வர் உத்தரவு
சென்னை :
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு இன்று வழக்கம்போல் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர். இம்மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவின் சிறப்பு மருத்துவர் பாலாஜி.
கத்தி குத்து தாக்குதல்
மருத்துவமனைக்கு வந்த சிலர் மருத்துவர் பாலாஜியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜியை குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதனால், ரத்தவெள்ளத்தில் மருத்துவர் பாலாஜி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தவர்கள், மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய இருவரை பிடித்தனர். பின்னர் சம்பவம் குறித்து கிண்டி போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து மருத்துவமனை வளாகத்துக்கு விரைந்து வந்த கிண்டி போலீஸார், பிடிபட்ட நபர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய மேலும் இருவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். மருத்துவமனைக்கு வந்திருந்த இவர்கள் யார்? மருத்துவர் மீது தாக்குதல் நடத்துவதற்கான காரணம் என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜிக்கு, இதே மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் அதிகமுள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில், மருத்துவர் மீது நடத்தப்பட்ட இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸார் பாதுகாப்பு
இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், “கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜிக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்.இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு
இந்நிலையில், அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நடந்த கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதுகுறித்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (நவ.13) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நான்கு பேர் சிகிச்சைக்காக வந்துள்ளனர். அங்கு புற்றுநோய் பிரிவில் சிகிச்சையளித்து வந்த மருத்துவர் பாலாஜி என்பவரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்பார்கள்.
தாக்குதல் நடத்தியவர் பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பதும், இந்த மருத்துவமனையில் அவரது தாயாருக்கு கொடுத்த சிகிச்சை குறித்து தவறான புரிதலின் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மருத்துவர் பாலாஜிக்கு அதிகமாக ரத்தம் வெளியேறியதால், உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மயக்க நிலையில் இருந்தாலும், நன்றாக இருக்கிறார் என்றும் அவர் கூறினார்.
கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை இயக்குநர் அளித்த பேட்டியில்,
இந்த தாக்குதல் நடத்தியதாக பிடிபட்டுள்ள நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த நபரின் தாய்க்கு உடல்நிலை சரியில்லை. இதனால், இந்த மருத்துவமனையில் 6 முறை கீமோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர், நுரையீரல் பாதிப்பு இருந்ததால், தனது தாயை வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். கடந்த இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு அவரது தாயின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார்.
அந்த மருத்துவமனையில் என்ன கூறினார்கள் என்று தெரியவில்லை. தனியார் மருத்துவமனையில் கூறியது தொடர்பாக மருத்துவர் பாலாஜியிடம் விவாதிக்க வந்தபோதுதான், இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் இருவருக்குள் என்ன விவாதம் நடந்தது என்பது, தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் கூறினால்தான் தெரியவரும். மருத்துவர் பாலாஜியின் அறையில்தான், அவருடைய அறையை மூடிவிட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
அதிகமான ரத்தம் வெளியேறியது
மருத்துவர் பாலாஜியின் கழுத்து, காதின் பின்பகுதி, நெற்றி, முதுகு மற்றும் தலையில் இரண்டு இடங்களில் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறது. மருத்துவரின் வயிற்றில் கத்திக்குத்து எதுவும் இல்லை. மற்ற காயங்களில் எல்லாம் ரத்தம் அதிகமாக வெளியேறியிருந்தது. மருத்துவர் ஏற்கெனவே ஒரு இதய நோயாளி. அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். அசிட்டோன் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால், சாதாரண காயங்கள் ஏற்பட்டாலே ரத்தம் வடிதல் அதிகமாக இருக்கும்.
7 இடங்களில் கத்திக்குத்து
இந்த தாக்குதலில் அவருக்கு அதிகமாக ரத்தம் வெளியேறியதால், உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அனைத்து துறை நிபுணர்களும் சேர்ந்து அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போதைக்கு அவர் மயக்க நிலையில் இருந்தாலும், அவர் நன்றாக இருக்கிறார். மொத்தம் 7 இடங்களில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல் நடத்தியவர் பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.” என்று அவர் கூறினார்.
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்
சென்னையில் அரசு மருத்துவர் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில் அறிவித்துள்ளார்.
#WATCH | Chennai, Tamil Nadu: Doctors at the Kalaignar Centenary Multy speciality government hospital sit on a protest after a 25-year-old man attacked a doctor with a knife today. pic.twitter.com/NKFrY66kZ0
— ANI (@ANI) November 13, 2024


No comments
Thank you for your comments