Breaking News

மாற்றுத்திறனாளிகளின் ஆராய்ச்சிப் படிப்புக்கு ஊக்கத்தொகை ரூ.ஒரு லட்சம் வழங்கப்படுகிறது - காஞ்சிபுரம் ஆட்சியர்

காஞ்சிபுரம், அக்.10:

மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்பவர்களுக்கு ரூ.ஒரு லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதுகுறிப்பு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை நீட்டித்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் 50 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தலா ரூ.ஒரு லட்சம் வரை ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

இதற்காக அரசு ரூ.50லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது.பகுதி நேரமோ அல்லது முழு நேரமோ ஆராய்ச்சிப் படிப்பு படிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். 

வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை.இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் முழு நேர அல்லது பகுதி நேர ஆராய்ச்சிப் படிப்பில் பயில்பவராக இருக்க வேண்டும்.

ஒரு லட்சம் ஊக்கத்தொகையானது ஆராய்ச்சிப் படிப்புக்கான ஆய்வறிக்கை,வாய்மொழித் தேர்வு தேதி ஆகியன வழங்கப்பட்டதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தவுடன் இத்தொகை முழுவதுமாக அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் மூலம் நேரடியாக மாணவர்களின் வங்கிக்கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவர்கள் தங்களது விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை,தனித்துவ அடையாள அட்டை,ஆதார் அட்டை நகல்,வங்கிக்கணக்கு புத்தக நகல்,ஆராய்ச்சி படிப்பு பயில்வதற்கான பல்கலைக்கழகம், கல்வி நிறுவனத்திலிருந்து பெற்ற ஆராய்ச்சிப் படிப்புக்கான ஆய்வறிக்கை, வாய்மொழித் தேர்வு தேதி மற்றும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதற்கான இருப்பிடச்சான்று முதலியனவற்றை சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து விண்ணப்பித்து பயனடையலாம்.மேலும் விபரங்களுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்,ஆட்சியர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம்,தொலைபேசி எண் : 044-29998040 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தேவையான விபரங்களையும் பெற்றுக் கொள்ளலாம் எனவும் ஆட்சியரது செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments