Breaking News

காஞ்சிபுரம் பொதுசுகாதாரக் குழுவின் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு முதல் பரிசு - ஆட்சியர் பாராட்டு

காஞ்சிபுரம்  :

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தஞ்சாவூரில் நடைபெற்ற 3வது சர்வதேச மாநாட்டில், செயல்பாட்டு ஆராய்ச்சி எனும் பிரிவின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட 50 ஆராய்ச்சிகளில் முதல் பரிசு பெற்ற காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரத்துறை குழு  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்களை சந்தித்து, சான்றிதழ் மற்றும் கேடயத்தையும் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.


பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை கடந்த 2022 ஆம் ஆண்டு தனது நூற்றாண்டினை கொண்டாடியது. நூற்றாண்டுகளை கடந்து மக்களுக்கு சேவையாற்றி வரும் இந்தத் துறையின் அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளையும், அனுபவங்களையும் உலகிற்கு பகிரும் வண்ணம் வருடாவருடம் சர்வதேச பொது சுகாதார மாநாடு நடத்திர இந்தத் துறை நடவடிக்கையை முன்னெடுத்தது. அதனைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி இந்த அறிவியல் மற்றும் மருத்துவ மாநாடு செயலாக்கம் பெற்றது. அதன்படி முதல் மாநாடு டிசம்பர் 2022-ல் மாமல்லபுரத்திலும், இரண்டாவது மாநாடு டிசம்பர் 2023ல் மதுரையிலும், தற்போது மூன்றாவது மாநாடு அக்டோபர் 2024, 3 முதல் 5 தேதி வரை மூன்று நாட்கள் தஞ்சாவூரில் நடைபெற்றது.

உலகளாவிய மருத்துவம் மற்றும் அறிவியல் நிபுணர்களின் உரைகள் இடம்பெற்றன. அத்துடன் 200 ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டு அதன் மீதான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரத்துறையின் சார்பில் “குழந்தை திருமணங்கள், வளர் இளம் பருவ கர்ப்பங்கள் மற்றும் அதனை தொடர்புடைய காரணிகள்” என்ற ஆய்வுக்கட்டுரை இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று வருடங்களில் நிகழ்ந்த 401 குழந்தை திருமணங்களை ஆராய்ந்து இந்த ஆய்வு கட்டுரை வெளியிடப்பட்டது.

மாவட்ட சுகாதார அலுவலர் மரு.த.ரா.செந்தில் மற்றும் மாவட்ட தாய் சேய் நல அலுவலர் திருமதி. அபிதா ஆனந்த சௌந்தர்யா, தொற்று நோய்க்கான மாவட்ட அலுவலர் மறு.எஸ்.லாவண்யா, தொற்ற நோய்க்கான மாவட்ட அலுவலர் மரு.சி.குலசேகர், மாநகர சுகாதார அலுவலர் மரு.அருள்நம்பி, உதவி திட்ட மேலாளர் மரு.ஆர். பார்த்திபன், உதவி இயக்குநர் திரு. பி.ரமேஷ் ஆகியோர் அடங்கிய குழு இந்த ஆய்வினை மேற்கொண்டு ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தனர்.

தஞ்சையில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் தாய் சேய் நலம், தொற்றுநோய், தொற்றாநோய், செயல்பாட்டு ஆராய்ச்சி இதர வகை என பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆராய்ச்சி கட்டுரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இவற்றுள் செயல்பாட்டு ஆராய்ச்சி (Operational Research) எனும் பிரிவின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட 50 ஆராய்ச்சிகளில் காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரத்துறையின் ஆய்வு முதல் பரிசை வென்றுள்ளது. இதற்கான பரிசு சான்றிதழையும், கேடயத்தையும் பொது சுகாதாரத் துறையின் இயக்குனர் மரு.தா.சி.செல்வவிநாயகம், கூடுதல் இயக்குநர்கள் மரு.சோமசுந்தரம், மரு.சம்பத், மரு.சேரன், மரு.விஜயலட்சுமி ஆகியோர் காஞ்சிபுரத்தின் ஆய்வுக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இக்குழுவினர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து, சான்றிதழ் மற்றும் கேடயத்தையும் காண்பித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து இக்குழுவினர் மேற்கொண்ட ஆய்வு குழந்தை திருமணங்கள் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும், மேலும் பல ஆய்வுகள் தொடர்ந்து இந்த குழுவினர் மேற்கொள்ள வாழ்த்துவதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments