புரட்டாசி மாத மகாளய அமாவாசை - காஞ்சிபுரம் கோயில்களில் முன்னோர்களுக்கு சிறப்பு வழிபாடு
காஞ்சிபுரம்,அக்.2:
புரட்டாசி மாத மகாளய அமாவாசையன்று முன்னோர்களை வழிபாடு செய்தால் குடும்ப நலன் கூடும்,வாரிசுகள் சிறப்புடன் வாழ்வார்கள் என்பதாக ஐதீகம்.இதனையொட்டி புதன்கிழமை புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி காஞ்சிபுரம் கச்சபேசுவரர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள திருக்குளத்தில் அதிகாலையில் இருந்தே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்னோர்களை வழிபாடு செய்தனர்.
காஞ்சிபுரம் சர்வ தீர்த்தக்குளக் கரையிலும் பக்தர்கள் முன்னோர்களுக்கு வழிபாடு செய்தனர்.வடக்கு ராமேசுவரம் என அழைக்கப்படும் திம்மராஜம்பேட்டையில் உள்ள பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேசுவரர் ஆலயத்தில் சிவாச்சாரியார் சீனிவாசன் தலைமையில் தூய தமிழில் திரளான பக்தர்கள் முன்னோர்களுக்கு வழிபாடு செய்தனர்.
இதனையொட்டி ராமலிங்கேசுவரர் மற்றும் பர்வத வர்த்தினி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ராமேசுவரத்தில் முன்னோர்களுக்கு வழிபாடு செய்த புண்ணியம் வடக்கு ராமேசுவரம் என அழைக்கப்படும் திம்ம ராஜம்பேட்டை ராமலிங்கேசுவரர் கோயிலில் செய்தால் அதே புண்ணியம் கிடைக்கும் என பக்தர்களால் நம்பப் படுவதால் திரளான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து முன்னோர்களுக்கு வழிபாடு செய்தனர்.
முன்னோர்களுக்கு வழிபாடு செய்த பக்தர்களிடம் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அறநிலையத்துறை சார்பில் ரூ.20 வசூலிக்கப்பட்டதற்கு பக்தர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments