Breaking News

பட்டாசுகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துக் கொள்ளுங்கள்- கலெக்டர் கலைச்செல்வி மோகன் வேண்டுகோள்

காஞ்சிபுரம், அக்.30:

பட்டாசுகளை குழந்தைகளுக்கு எட்டாத வகையில் பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்ளுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, கலைச்செல்வி மோகன்   வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, 

பட்டாசுகளை எப்போதும் திறந்த வெளியில் மட்டுமே வெடிக்க வேண்டும்.எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அருகில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.பட்டாசுகளை மூடிய பெட்டியில் குழந்தைகளுக்கு எட்டாத வகையில் பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

பட்டாசுகளை வெடிக்கும் போது பருத்தியாலான ஆடைகளையே அணிந்து கொள்ளவும்.பெரியவர்களின் மேற்பார்வையில் மட்டுமே குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கலாம்.

எந்தக் காயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் பட்டாசு வெடிக்கும் போது அருகில் வருவதை தவிர்க்கவும்.

தற்செயலான தீ விபத்துக்கு தயாரான விதத்தில் ஒரு வாளியில் தண்ணீர் மற்றும் மணலை அருகில் வைத்துக்கொள்ளவும்.

பயன்படுத்திய பட்டாசுகளை அப்புறப்படுத்துவதற்கு முன்பாக தண்ணீர் ஊற்றி அதை முழுமையாக அனைத்த பின்னரே அதை சுத்தம் செய்ய வேண்டும்.பட்டாசு வெடிக்கும் போது எப்போதும் செருப்பு அல்லது காலுறை அணிவது நல்லது. 

இது காலில் காயங்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கும்.பட்டாசுகளை வெடித்த பிறகு சுத்தமான தண்ணீரில் கைகளை கழுவ வேண்டும்.கைகளால் பட்டாசு வெடிக்கவே கூடாது.மின்சாரக் கம்பம் மற்றும் மின்வயர்களின் அருகில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

பட்டாசு வெடிக்கும் போது பட்டாடைகள் அணிவதை தவிர்க்கவும். நீளமான ஊதுபத்திகளை பட்டாசுகளை கொளுத்த பயன்படுத்த வேண்டும்.வாகனங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.பட்டாசுகளை பிறர் மீது வீசி விளையாடுவதும் ஆபத்தானது.

பட்டாசு வெடிக்கும் போது ஏதேனும் விபத்துக்கள் அல்லது காயங்கள் ஏற்படும் போது அருகில் உள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள்,சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும், பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடி மகிழுமாறும் ஆட்சியரது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments