Breaking News

அதிக ஒலி எழுப்பிய 16 வாகனங்களின் ஏர்ஹாரன்கள் பறிமுதல் - ரூ.2.07 லட்சம் அபராதம் விதிப்பு

காஞ்சிபுரம், அக்.13:

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை அதிகாரிகள் நடத்திய கூட்டாய்வில் அதிக ஒலி எழுப்பியதாக 16 வாகனங்களின் ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.2.07 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.


காஞ்சிபுரத்தில் பொதுமக்கள், பயணிகள் ஆகியோருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பேருந்துகள், கனரக லாரிகள் ஆகியனவற்றில் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மற்றும் எஸ்பி கே.சண்முகம் ஆகியோருக்கு புகார்ள் வந்தன.

இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர். இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் க.பன்னீர் செல்வம் தலைமையில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் லோகநாதன் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீரென தணிக்கையில் ஈடுபட்டனர்.

வாகன சோதனையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிக ஒலி எழுப்பும் கருவிகளை கணித்து விதிமீறிய பேருந்துகள்,கனரக லாரிகளில் இருந்த ஏர்ஹாரன்களை அகற்றினார்கள். 

ஏர்ஹாரன்களால் ஏற்படும் இடையூறுகளையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லி இனிமேல் எப்போதும் பயன்படுத்தக் கூடாது என்றும் எச்சரித்தனர். அதிகாரிகளின் கூட்டு வாகன தணிக்கையில் மொத்தம் 16 வாகனங்களிடமிருந்த ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அபராதமாக ரூ.2.07 லட்சமும் விதிக்கப்பட்டது.

No comments

Thank you for your comments