Breaking News

விபத்தில் உயிரிழந்தால் அஞ்சலக காப்பீட்டில் ரூ.10லட்சம் இழப்பீடு - அஞ்சலக அதிகாரி பேச்சு

காஞ்சிபுரம், அக்.5:

ஆண்டுக்கு ரூ.599 மட்டும் அஞ்சலக காப்பீடு செய்திருந்து விபத்தில் உயிரிழந்து விட்டால் சம்பந்தப்பட்ட நபரின் வாரிசு தாரருக்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதாக காஞ்சிபுரம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.அருள்தாஸ் சனிக்கிழமை பேசினார்.


காஞ்சிபுரத்தை சேர்ந்த சம்பத்குமாரின் மகன் சரவணன்(20)இவர் அஞ்சலக விபத்துக் காப்பீடு செய்திருந்த நிலையில் அண்மையில் விபத்தில் உயிரிழந்தார்.சரவணனின் தந்தை சம்பத்குமாருக்கு அஞ்சலக விபத்துக் காப்பீடு மூலம் ரூ.10லட்சம் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் தலைமை அஞ்சலக அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பயனாளி சம்பத்குமாரிடம் இழப்பீட்டுக் காசோலையை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.அருள்தாஸ் வழங்கி பேசியது..

அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்டே பேமண்ட்ஸ் வங்கியும்,டாடா ஏஐஜி காப்பீட்டு நிறுவனமும் இணைந்து பிரத்யேக விபத்துக் காப்பீட்டு பாலிசியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இக்காப்பீட்டுத் திட்டத்தில் 18 வயது முதல் 65 வயது வரை உள்ள எவரும் ஆண்டுக்கு ஒரு முறை ரூ.599 மட்டும் செலுத்தினால் போதும்.காப்பீடு செய்த நபர் விபத்தில் உயிரிழந்து விட்டால் அதன் வாரிசுதாரருக்கு உரிய ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு உடனடியாக ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகையை வழங்குகிறோம்.பொதுமக்கள் இந்த வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வுக்கு இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியின் முதுநிலை மேலாளர் சத்தீஷ் மேகலா,அஞ்சலக ஆய்வாளர் அருண் ராஜ்குமார்,தலைமை அஞ்சலக அதிகாரி எம்.கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அஞ்சலக காப்பீட்டுப் பிரிவு வளர்ச்சி அதிகாரி கேசவன் வரவேற்று பேசினார்.நிறைவாக அஞ்சலக மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.பாலாஜி நன்றி கூறினார்.

No comments

Thank you for your comments