Breaking News

காஞ்சிபுரம் மாமன்றக் கூட்டத்தில் கூச்சல்.. குழப்பம்.. பதற்றம்..



காஞ்சிபுரம், செப்.3:

காஞ்சிபுரம் மாமன்றக் கூட்டம் 8 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில் மேயரின் எதிர்தரப்பினர் மற்றும் எதிர்க்கட்சியினரின் வாக்குவாதத்தால் கூட்டத்தில் கூச்சலும்,குழப்பமும் ஏற்பட்டு பதற்றமான சூழல் ஏற்பட்டது.



காஞ்சிபுரம் மாமன்றக் கூட்டம் 8 மாதங்களுக்குப் பிறகு மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. மாநகர துணை மேயர் ஆர்.குமரகுருநாதன்,ஆணையாளர் நவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டம் தொடங்கியதுமே அதிமுக உறுப்பினர் சண்முகநாதன் மேயர் பெரும்பான்மையை நிருபித்து விட்டுத் தான் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றார்.இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் மேயருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உறுப்பினர்களும் எழுந்து நின்று பெரும்பான்மையை நிருபித்துவிட்டு கூட்டத்தை நடத்துங்கள் என்று கூச்சலிட்டனர்.


கூச்சலின் போது மேயர் மொத்தம் உள்ள 96 தீர்மானங்களில் 3 மற்றும் 4 ஆகிய தீர்மானங்கள் தவிர 94 தீர்மானங்கள் நிறைவேற்றப் படுவதாகவும், மக்களுக்கு நன்மைகள் செய்யத்தான் பதவிக்கு வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து பேசுங்கள், சண்டை போட வரவில்லை என்றார்.இந்த நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திடீரென கூச்சலிட்டுக்கொண்டே வந்து மேயர் முன்பாக தரையில் அமர்ந்து ஒவ்வொரு தீர்மானத்தையும் வாக்கெடுப்பு நடத்திய பிறகே நிறைவேற்ற வேண்டும் என்றும் கூச்சலிட்டனர்.

மண்டலக்குழு தலைவர் சந்துரு மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நடந்த போது எங்கே போனீர்கள் என்று கேட்டதால் எதிர்க்கட்சியினர் மற்றும் மேயருக்கு எதிர்தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

மண்டலக்குழு தலைவர் சந்துருவை முற்றுகையிட்டனர்.இது கைகலப்பாக மாறி விடுமோ என்ற பதற்றம் உருவாகியிருந்த நிலையில் மேயர் தீடீரென கூட்ட அரங்கிலிருந்து 94 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக கூறி எழுந்து சென்றார்.

மேயர் எழுந்து சென்றதும் எதிர்க்கட்சியினர் மேயர் அறை முன்பாக வந்து கூச்சலிட்டனர். மேயரின் ஆதரவு உறுப்பினர்கள் மேயரை பத்திரமாக அழைத்து சென்றனர்.

திமுக மாமன்ற உறுப்பினர்களே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டு கடும் கோபத்துடன் ஒருவரை ஒருவர் பேசியதால் இது குறித்து கட்சித் தலைமைக்கு தெரிவிக்கப்படும் எனவும் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் தெரிவித்தார்.

மேயருக்கு எதிர்தரப்பினர் மற்றும் எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆணையாளர் நவேந்திரனை சந்திக்க சென்று அவர் இல்லாததால் மீண்டும் கூட்டம் நடைபெற்ற அண்ணா அரங்கத்திற்கு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments

Thank you for your comments