டீ கடைகளில் பயன்படுத்திய வீட்டு கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் - ஆட்சியர் அதிரடி
காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் வட்டத்திற்குட்பட்ட உணவகம் மற்றும் டீ கடைகளில் வணிக நோக்கில் பயன்படுத்தப்பட்ட எரிவாயு உருளைகள் கைப்பற்றுகை செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாவது,
காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் இயங்கும் உணவகம் மற்றும் டீ கடைகளில் வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக நோக்கில் பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விற்பனை அலுவலர் ஆகியோர் தலைமையில், 28.08.2024 அன்று திடீர் தணிக்கை மேற்கொள்ளப்பட்டதில், 27 இடங்களில் இருந்து வணிக நோக்கில் பயன்படுத்தப்பட்ட 35 (31 இன்டேன் மற்றும் 4 எச்.பி.) வீட்டு உபயோக சிலிண்டர்களை சம்பவ இடசாட்சிகள் முன் மகஜரில் கைப்பற்றுகை செய்யப்பட்டது.
மேற்படி கைப்பற்றுகை செய்யப்பட்ட 31 இன்டேன் மற்றும் 4 எச்.பி. மொத்தம் 35 எரிவாயு உருளைகளை Sri Subramanya Indane Gas Agency நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு, இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு மானியவிலை வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக நோக்கில் கடைகளில் பயன்படுத்தும் நேர்வில், இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955ன் கீழ் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments