Breaking News

15 ஆண்டுகளுக்கு பிறகு பிடிபட்ட முக்கிய குற்றவாளி - கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைப்பு

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் கிராமத்தில் அரசு மதுபானக்கடையை துளையிட்டு திருடியது மற்றும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான மோகன்குமார் என்பவரை காவல்துறையினர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.



காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலவாக்கம் அரசு மதுபானக்கடையின் சுவரினை துளையிட்டு அதிலிருந்த ரூ.8,62,930 மதிப்புள்ள 107 அட்டைப்பெட்டிகளில் இருந்த மதுபாட்டில்கள் திருடு போயிருந்தது.

கடந்த 1.3.2024 ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக அக்கடையின் மேற்பார்வையாளர் தயாளன் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

காவல்துறையினரின் விசாரணையில் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான சுபாஷ்,விக்னேஷ், கார்த்திக் ஆகிய 3 பேர் கடந்த 11.3.2024 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மூவரும் கொடுத்த தகவலின் பேரில் இத்திருட்டு வழக்கில் மூளையாக செயல்பட்டவர் செங்கல்பட்டு மாவட்டம் பாலூரை அடுத்த கடுகுப்பட்டு கிராமம் சர்ச்தெருவைச் சேர்ந்த மோகன்குமார்(44) என்பது தெரிய வந்தது.இவரைக் கைது செய்வதற்கென வாலாஜாபாத் காவல் நிலைய ஆய்வாளர் பிரபாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மோகன்குமாரை தேடி வந்தனர்.

தனிப்படையினரின் விசாரணையில் மோகன்குமார் செங்கல்பட்டில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு கடந்த 2009 ஆம் ஆண்டு பிணையில் வந்து மீண்டும் சிறைக்கு செல்லாமல் தலைமறைவாக இருப்பதும் தெரிய வந்தது.

இந்நிலையில் மோகன்குமாரை வாலாஜாபாத் ஆய்வாளர் பிரபாகர் தலைமையலான தனிப்படை போலீஸôர் அவர் வீட்டில் தங்கியிருந்த போது கைது செய்தனர்.15 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட மோகன்குமார் வந்தவாசி, மேல்மருவத்தூர், மதுராந்தகம் உள்ளிட்ட அரசு மதுபானக்கடைகளின் சுவர்களையும் துளையிட்டு பணம் திருடியவர் என்பதும் இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளும் இருந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

மோகன் குமாரை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

No comments

Thank you for your comments