பட்டாபிராமில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு இன்னமும் திறக்கப்படாத அவலம்
பட்டாபிராம், செப்.9-
சென்னை மாநகரின் புறநகரான ஆவடி, அம்பத்தூர், மற்றும் திருவள்ளூர் மாவட்டம் ஆகியவற்றின் வளர்ச்சியால், இப்பகுதி மெல்ல ஒரு தொழில் நிறுவன மற்றும் குடியிருப்பு மையமாக மாறி வருகிறது. இதன் முக்கிய சாலை போக்குவரத்து காரணமாக, பட்டாபிராம் மேம்பாலத்தின் கட்டுமானம் திட்டமிடப்பட்டது. இந்த மேம்பாலம் சென்னையிலிருந்து ஆவடி வழியாக திருவள்ளூர், திருத்தணி, திருப்பதி, பெங்களூர் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.
ரயில் பாதை பட்டாபிராமில் பேருந்து செல்லும் சாலையின் குறுக்கே செல்வதால் வாகன ஓட்டிகள் வாகனங்களில் செல்ல முடியாத நிலையில் இருந்து வந்தன. ஆகையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கை ஏற்று பட்டாபிராமில் பாலம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் மேம்பாலம் கட்டும் பணி சில ஆண்டுகளாக மிகவும் மந்தமாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில் பிப்ரவரி மாதம் காலச்சக்கரம் நாளிதழில் செய்தியாக வெளியிட்டு இருந்தோம். இதனை தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல் வருவதனாலும் அதிவேகமாக பாலம் கட்டும் பணி நடைபெற்று முடிந்தது. தேர்தலுக்கு முன்னரே திறக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், தேர்தல் முடிந்து நான்கு மாதங்கள் ஆகிறது. இன்னமும் கூட பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு வராததால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதன் கீழ் பகுதிகளில் இருக்கும் சாலைகள் பெரும்பாலும் நெரிசலால் சிக்கி வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து, சாலை விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. நகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இடையே பயணிப்போர், குறிப்பாக தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள், நேரத்தை வீணாக்க வேண்டிய சூழலில் சிக்கியுள்ளனர்.
போக்குவரத்து துறையினரிடம் விசாரணை மேற்கொண்டதில் போக்குவரத்துத் துறையினர் தலைமைச் செயலகத்திற்கு கடிதம் அனுப்பி இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் இன்னும் திறப்பதற்கு தேதி குறிப்பிடாமல் இருக்கிறார்கள் என்று தெரிவித்தனர்.
இன்னும் திறக்கப்படாததால் எங்களுக்கும் சிரமமாக இருக்கிறது என்றும் தெரிவித்தனர். சில நேரங்களில் அதிக அளவில் போக்குவரத்து நெரிச்சல் இருப்பதால் வாகன ஓட்டிகளே இந்த மேம்பாலத்தை கட்டப்பட்டிருந்த கயிறை அறுத்துக் கொண்டு செல்கின்றனர். அதுமட்டுமில்லாமல் பூந்தமல்லியில் இருந்து வரும் வாகனங்கள் இந்த வழியாக செல்ல மிகவும் சிரமமாக இருக்கிறது.
இந்த சாலையின் நடுவே இரண்டு சிலைகள் இருப்பதால் இந்தப் பகுதியில் பெறும் அளவு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த மேம்பாலத்திலிருந்து இறங்கும் போது வேகமாக இறங்கும் வண்டிகள் தடுமாறினால் இந்த சிலையில் இடித்து விடுவார்கள். ஆகவே இந்த சிலைகளையும் அகற்றி சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் காவல்துறையினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரசாங்கத்தின் நிர்வாக சிக்கல்களும், அதிகாரிகளின் உரிய கவனக்குறைவாலும் இம்முயற்சி இவ்வளவு நாளாகக் கூச்சலின்றி நின்று கொண்டிருக்கிறது.
பொது மக்களின் அழுத்தத்தையும் ஊடகங்கள் எதிரொலிக்கும் கேள்விகளையும் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து இந்த மேம்பாலத்தை திறக்க வேண்டும்.
எப்போது திறக்கப்படும் இந்த பட்டாபிராம் மேம்பாலம்.. பொறுத்திருந்து பார்ப்போம்..
No comments
Thank you for your comments