Breaking News

நீர்நிலைகளில் வண்டல் மண் /களிமண்ணை கட்டணமின்றி எடுத்துச் செல்வதற்கான அனுமதி - ஆட்சியர் தகவல்

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள நீர்நிலைகளில் வண்டல் மண் /களிமண் ஆகியவற்றை கட்டணமின்றி எடுத்துச் செல்வதற்கான  அனுமதி  வழங்குவது குறித்தான அறிவிப்பு  வெளியாகி உள்ளது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன்  தகவல் தெரிவித்துள்ளதாவது, 

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுபாட்டிலுள்ள நீர்நிலைகளில் வண்டல் மண் / களிமண் ஆகியவற்றை கட்டணமின்றி எடுத்துச் செல்வதற்கான அரசாணை (பல்வகை) எண்.14, இயற்கை வளங்கள் துறை (எம்.எம்.சி.1) நாள்.12.06.2024 அரசாணையை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் பிறப்பித்துள்ளார்.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத் துறை கட்டுப்பாட்டிலுள்ள தகுதி வாய்ந்த 263 ஏரிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள தகுதிவாய்ந்த 114 ஏரிகளின் பட்டியல் என ஆக மொத்தம் 377 ஏரிகளின் பட்டியல் காஞ்சிபுரம் மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.4, 5 மற்றும் 6-ன்படி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள் 1959 -இன் விதி எண் 12(2) (a) மற்றும் (b)-இன் கீழ் கட்டணமில்லாமல் விவசாய மேம்பாட்டிற்காக விண்ணப்பம் செய்வதற்கான நிபந்தனைகள்:

மனுதாரரின் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலம் அமைந்துள்ள கிராமம் மற்றும் வண்டல் மண்/களிமண், தூர்வாரி எடுத்துச் செல்லப்பட வேண்டிய கண்மாய்/ஏரி/குளம் அமைந்துள்ள கிராமம் ஆகியவை அதே வருவாய் வட்டத்திற்குள் அமைந்திருக்க வேண்டும்.

விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண்ணை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் நபர் விவசாய நிலம் வைத்துள்ளவராக இருக்க வேண்டும் அல்லது குத்தகை பதிவேட்டின் பதிவு செய்யப்பட்டு குத்தகைதாரராக  இருக்க வேண்டும். மேலும் மண்பாண்ட தொழிலாளராக இருப்பின் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அதனை உறுதி செய்ய வேண்டும்.

நிலத்தின் வகைப்பாடு (நஞ்சை / புஞ்சை), விவசாய நிலத்தின் விஸ்தீரணம்/ குத்தகை உரிமம் பெற்று விவசாய பணி மேற்கொள்ளப்பட்டால் அதன் விபரம் மற்றும் வாகனத்தின் பதிவு எண் ஆகியவற்றுடன் அனுமதி கோரும் வண்டல் மண் / களிமண் கனிமத்தின் அளவு ஆகிய தகவல்களுடன் தங்களது விண்ணப்பத்தினை tnesevai.tn.gov.in (Online website) இணையதள முகவரி வாயிலாக சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட நீர்நிலைகளின் (Tank incharge) கட்டுப்பாட்டு அலுவலர் முன்னிலையில் வண்டல் மண்/களிமண் இலவசமாக எடுத்துக் கொள்ள இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும், ‘‘ஆற்று வண்டல் தேற்றும் பயிரை‘‘ என்கிற பழமொழிக்கிணங்க, ஏரிகள், குளங்களில் உள்ள நீர்முழுவதையும் பயன்படுத்திய பின்னர், அதன் கீழ்ப்பகுதிகளில் படிந்திருக்கும் வண்டல் மண்ணில் விளைநிலத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன. 

இதனை விவசாயிகள் தங்கள் வயலில் உள்ள மண்வளத்தினை மேம்படுத்துவதற்கு காஞ்சிபுரம் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்ட ஏரிகள், குளங்களில் உள்ள வண்டல் மண்ணை பயன்படுத்திக் கொள்ளுமாறும், மேலும், மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக ஏரிகளில் இருந்து களிமண் எடுத்து தங்களின் தொழில்வளத்தை மேம்படுத்தி கொள்ளுமாறும் மேலும், ஏரிகளிலிருந்து மண் எடுப்பதினால் விளைநிலங்கள் வளம்பெறும் என்பதுடன் அத்தகைய ஏரிகள், குளங்களில் தூர்வாரி கொள்ளளவை உயர்த்தினால், வரும் மழைகாலங்களில் அதிக அளவு மழைநீரை சேமிக்க இயலும் என்பதால் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் அதிகளவு விண்ணப்பித்து பயன் பெறுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மற்றும் துணை இயக்குநர், புவியியல் மற்றும்                                சுரங்கத்துறை காஞ்சிபுரம் ஆகியோரை அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


 

No comments

Thank you for your comments