கல்லூரிகளில் போதைப் பொருள் எதிர்ப்பு மையம் அமைக்க வேண்டும் - காவல் ஆணையர் கி.சங்கர் வலியுறுத்தல்
ஆவடி :
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் கல்லூரிகளின் நிர்வாகிகள் மற்றும் முதல்வர்கள் ஆகியோருக்கான போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் திருமுல்லைவாயிலில் உள்ள காவலர் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கிற்கு ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் தலைமை தாங்கினார். கூடுதல் ஆணையர் ராஜேந்திரன் மற்றும் காவல் துணை ஆணையர்கள் முன்னிலை வகித்தனர். இக்கருத்தரங்கில் 60 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் , கலை அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் சில கல்லூரி நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் 150 பேர் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கில் ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் கலந்து கொண்டு பேசியதாவது,- போதையில்லா தமிழ் நாடு என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிக்கோளின்படி ஆவடி பகுதியில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகளிடம் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு கல்லூரியிலும் "போதைப் பொருள் எதிர்ப்பு மையம்" ஏற்படுத்த வேண்டும். கல்லூரிகளில் மாதந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும். மேலும் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மற்றும் கல்லூரியில் பணியாற்றும் பெண் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து புகார்கள் தெரிவிக்கவேண்டி அதற்கென கல்லூரிகளில் Local complaint for women in works place அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என நிர்வாகத்தினரிடம் அறிவுறுத்தினார்
No comments
Thank you for your comments