Breaking News

காஞ்சிபுரத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

காஞ்சிபுரம், செப்.9:

காஞ்சிபுரம் ரங்கசாமி குளத்திலிருந்து 20 விநாயகர் சிலைகள் திங்கள்கிழமை ராஜவீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் விஜர்சனம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டன.



காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் மொத்தம்307 விநாயகர் சிலைகள் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. 

இதில் காஞ்சிபுரம் மாநகராட்சிப் பகுதிகளான காந்திரோடு, பிள்ளையார்பாளையம், நாகலூத்து தெரு, சங்கூசா பேட்டை, டோல்கேட் உள்பட 20 இடங்களில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. 3வது நாளாக திங்கள்கிழமை பல்வேறு இடங்களில் இருந்த 20 விநாயகர் சிலைகளும் இந்து முன்னணி சார்பில் காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதிக்கு எடுத்து வரப்பட்டன.

விஜர்சன ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பாக இந்து முன்னணியின் பொதுக்கூட்டம் 37 வது ஆண்டாக நடைபெற்றது. 

அமைப்பின் கோட்ட செயலாளர் ஆர்.டி.மணி கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எஸ்.சந்தோஷ், ஜெ.ஞானவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூசி சஞ்சீவினி மடத்தின் நிர்வாகி அனுமன் மாதாஜி,பாஜக மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு, விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட தலைவர் சிவானந்தம் மற்றும் பசுத்தாய் கணேசன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். 

ரங்கசாமி குளத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலம் கங்கை கொண்டான் மண்டபம், ராஜவீதிகள் வழியாக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டன.

No comments

Thank you for your comments