Breaking News

அதிகரிக்கும் குற்றச்செயல்கள்! - Dr கா.குமாரின் என் குரல்


 


வேலூர் :

தமிழகம் முழுவதும் சமீபத்திய காலங்களில் குற்றச்செயல்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை சந்தித்துள்ளது. இதன் பின்னணியில் பல்வேறு சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் காரணங்கள் உள்ளன. இது தனிநபர்களின் உயிர்களுக்கு மட்டுமல்ல, சமுதாயத்தின் அமைதிக்கும் மாபெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எடப்பாடி காவல் நிலைய வளாகத்தில் நேற்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதே குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்பதை தெள்ளத்தெளிவாக கோட்டிட்டு காட்டுகிறது. காவல்நிலையங்களின் பாதுகாப்பே இன்று கேள்விக்குறியாகி உள்ளது.



குற்றச்செயல்களின் பல்வேறு வடிவங்கள் மற்றும் அதற்கான காரணங்களை ஆராய்வது இன்றைய முக்கிய தேவை.

குற்றங்கள் அதிகரிப்பு

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் தமிழ்நாட்டில் சுமார் 500க்கும் அதிகமான கொலைகள் நிகழ்ந்துள்ளன. குற்றச்செயல்களின் இந்த அதிர்ச்சி மிகுந்த உயர்வு, சமூக அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. குறிப்பாக கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, நகை திருட்டு, போதை பொருட்கள் கடத்தல் போன்ற  குற்றங்கள் சமீக காலமாக அதிகரித்து வருகின்றன.



பாலியல் வன்கொடுமை

பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் மற்றும் பாலியல் அடிமைத்தனம் போன்றவை சமூகத்தைப் பாழாக்கும் வன்முறைகளாக விளங்குகின்றன.

போதைப் பொருள் 

போதைப்பொருள்கள் மனிதர்களின் வாழ்க்கையை மட்டும் அல்ல, சமுதாயத்தின் முழு அமைப்பையும் நொறுக்குகின்றன. இதற்கான பல தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று பள்ளி மாணவர்கள் கையில் எளிதாக கிடைக்கும் வகையில் போதைபொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது என்பது வேதனையாக உள்ளது. 

சைபர் குற்றங்கள்

தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியோடு, ஆன்லைன் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன. இணையவழி தாக்குதல், நிதி மோசடிகள் போன்ற சைபர் குற்றங்களும் மக்களை பீதி அடைய செய்துள்ளது. 

குற்றப் பின்னணிகள்

பொருளாதாரச் சிக்கல்களின் காரணமாகவே பலர் குற்றவழிக்குச் செல்கிறார்கள். வேலைவாய்ப்பின் குறைவு, வறுமை, மற்றும் கல்வியின்மை போன்றவைகள் குற்றச்செயல்களை ஊக்குவிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன.



குடும்பங்களில் நடந்துவரும் பிரச்சினைகள், தவறான உறவுகள்,​ ​ பாதிப்புகள் குற்றச் செயல்களுக்கு வழிவகுக்கின்றன. பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகள் மற்றும் போதிய ஆதரவு இல்லாததாலும் குற்றம் சம்பவிக்க வாய்ப்புள்ளது. இதற்கு பல உதாரணங்கள் சமீபத்திய கொலை வழக்குகளில் காணப்படுகின்றன. 

அரசியல் குளறுபடிகள், சமூக மோதல்கள், மற்றும் மத பிரச்சினைகள் குற்றச் செயல்களில் அதிகரிக்க காரணமாக உள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சி குற்றவாளிகளுக்கு புதிய வழிகளை வழங்கி வருகிறது.

அதிகாரமிக்கவர்கள், பணத்தேவைகளை காட்டி ஏழை எளியோர்களை, அடியாட்களாக மாற்றுவதும்  அன்மைகாலமாக அதிகரித்து வருகிறது எனபதில் ஐயமில்லை. கூலிப்படைகள் பின்னணியில் அதிகாரமும், பண பலமும் உள்ளது. இதனால் அப்பாவி இளைஞர்களின் வாழ்வு சிறைவாசமடைகிறது. 

தடுப்பு மற்றும் தீர்வுகள்:

குழந்தைகள் மற்றும் இளைஞர் களுக்கான சிறப்பான கல்வி, விழிப்புணர்வு மூலம் குற்றவழி செல்லாமல் தடுக்கலாம். கடுமையான சட்டங்களை உருவாக்கி, குற்றவாளிகளை ஒழிக்க வேண்டும். பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் குழந்தைகளுக்கு நேர்மையான வழிகாட்டியாக இருக்க வேண்டும். தனிமனித ஒழுக்கத்தை போதிக்க வேண்டும்.

காவல்துறையின் செயல்திறன்

காவல்துறை, குற்றங்களை தடுப்பதில் சில நேரங்களில் மெத்தனமாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு சமீபத்தில் அதிகமாக எழுந்துள்ளது. பல வழக்குகள் மீது காவல்துறை மந்தமாக அணுகுவதால் குற்றவாளிகள் தண்டனை தவிர்த்துவிடுகின்றனர். 

சில சந்தர்ப்பங்களில், காவல்துறை அதிகாரிகள் மீது நேர்மையற்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும், காவல்துறையின் மறுசீரமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்துவது குற்றச்செயல்களை குறைக்க உதவலாம்.

No comments

Thank you for your comments