காஞ்சிபுரத்தில் உடல் உறுப்பு தான கையேடு வெளியீட்டு விழா
காஞ்சிபுரம், ஆக.13:
இந்திய மருத்துவக் கழகம் காஞ்சிபுரம் கிளையின் சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு கையேடு வெளியட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்திய மருத்துவக் கழகம் தமிழ்நாடு கிளையின் உறுப்பு தானக் குழு அச்சிட்டுள்ள உறுப்பு தான விழிப்புணர்வு கையேடு வெளியீட்டு விழா காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இந்திய மருத்துவக் கழக காஞ்சிபுரம் கிளையின் தலைவர் எஸ்.மனோகரன் வெளியிட அதன் முதல் பிரதியை சென்னையை சேர்ந்த கதிரியக்க மருத்துவர் கார்த்திகேயனும்,2 வது பிரதியை மருத்துவர் பி.டி.சரவணனும் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள மருத்துவர் அசோகனின் மகன் மூளைச்சாவு ஏற்பட்டதால் அவரது உறுப்புகளை தானம் செய்ததில் 6 உயிர்கள் காப்பாற்றப் பட்டதை நினைவு கூர்ந்து மருத்துவரின் மனித நேய செயலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சென்னை மியாட் மருத்துவமனையின் சிறப்பு கதிரியக்க மருத்துவர் கார்த்திகேயன் உடல் உறுப்புகளை அதி நவீன கருவிகள் மூலம் பார்த்துக்கொண்டே உரிய சிகிச்சை அளித்தல் என்ற தலைப்பில் பேசினார்.மருத்துவர் ஆர்.பிரதீப்குமார் திடீர் மாரடைப்பின் போது நவீன சிகிச்சைகள் என்ற தலைப்பில் பேசினார்.
நிறைவாக மூத்த மருத்துவர் என்ற முறையில் இந்திய மருத்துவக் கழக தலைவர் எஸ்.மனோகரனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கருத்தரங்கிற்கு மருத்துவர்கள் ந.சு.ராதாகிருஷ்ணன், வி.முத்துக்குமரன், சங்க பொருளாளர் ஞானகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்க செயலாளர் மருத்துவர் தன்யக்குமார் நன்றி கூறினார்.இக்கருத்தரங்கில் மருத்துவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments