காஞ்சிபுரம் அருகே புதியதாக காவல் நிலையம் திறப்பு
காஞ்சிபுரம் அருகே புதியதாக காவல் நிலையம் திறப்பு.
மிகப்பெரிய காவல் எல்லையை கொண்ட காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையம் இரண்டாக பிரிப்பு.
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையம், காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள 66 கிராமங்களும் 23 குக்கிராமங்கள் என மொத்தம் 89 கிராமங்களை உள்ளடக்கி காவல் எல்லையை கொண்ட மிகப்பெரிய காவல் நிலையமாக செயல்பட்டு வந்தது.
இதன் காரணமாக புகார் அளிக்க வரும் கிராம மக்களும், கண்காணிப்பு பணிகளுக்கு செல்லும் போலீசாரும் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர்.
அதனால் காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்து வந்தது.
பொதுமக்கள் மற்றும் போலீசாரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சட்ட சபையில் நடந்த காவல்துறை மானிய கோரிக்கையின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் பொன்னேரி கரையில் பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
அதன்படி காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலைய எல்லையை இரண்டாகப் பிரித்து 39 தாய் கிராமங்களான கருப்படைதட்டடை, ஈஞ்சம்பாக்கம், விசகண்டிக்குப்பம், வேளியூர், ஏரிவாக்கம், புத்தேரி, மணியாட்சி, மூலப்பட்டு, படுநெல்லி புள்ளலூர், கனகம்பாக்கம் தண்டலம்(139), புரிசை, வளத்தூர், பள்ளம்பாக்கம், போந்தவாக்கம், கொட்டவாக்கம், பரந்தூர், சிறுவாக்கம், காரை, சேமந்தாங்கல், வேடல்,சீயட்டி, பூண்டிதாங்கல்,ஆண்டி சிறுவள்ளூர், பொடவூர்,மடவுபுரம், நெல்வாய், தண்டலம் (144), தொடூர், ஆரியம்பாக்கம், நீர்வள்ளூர், கூத்திரம்பாக்கம், இலுப்பைப்பட்டு, ஆட்டுபுத்தூர் சேக்கன்குளம், சிட்டியம்பாக்கம்,கருர், சிறுவேடல், மற்றும் 19 குக்கிராமங்கள் கம்மவார்பாளையம், அரங்கனாதாபுரம், லப்பைகண்டிகை, சாமந்திபுரம், வரதாபுரம், நாகப்பட்டு, காட்டுப்பட்டூர், மோட்டுர், கல்லிப்பட்டு, ராஜகுளம், சின்னையன்சத்திரம், பருத்திகுளம், காரைப்போட்டை (கோனேரிகுப்பம்), தாமரைத்தாங்கல் (கோனேரிகுப்பம்), வெள்ளைகேட் (திம்மசமுத்திரம்), செட்டியார்பேட்டை (ஏனாதூர்), கட்டவாக்கம் புதுப்பாக்கம் (கிழக்கு), ஊவேரி (கிழக்கு) அடங்கிய காவல் எல்லையை வரையறுத்து பொன்னேரிக்கரை எனும் புதிய காவல் நிலையத்தை உருவாக்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி புதிய பொன்னேரிக்கரை காவல்நிலையம் திறப்பு விழா நேற்று பொன்னேரி கரை அண்ணா பல்கலைக்கழகம் உறுப்புக்கல்லூரி அருகில் நடைபெற்றது.
புதிய காவல் நிலைத்தை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கே.சண்முகம் தலைமையேற்று திறந்து வைத்தார். பரந்தூர் விமான நிலையம் சென்னை பெங்களூர் அதிவிரைவு சாலை அருகாமையில் உள்ளதால் அடுத்த பத்து ஆண்டுகளில் பெருநகரமாக உருவாகும் என கருத்தில் கொண்டு இந்த புதிய காவல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் தெரிவித்தார்.
இத்திறப்பு விழாவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மார்ட்டின் ராபர்ட்ஸ், சார்லஸ் சாம் ராஜதுரை பாலகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அம்பேத்கர், நிவாசன், மற்றும் போலீசார் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் மேற்குறிப்பிட்ட கிராம மக்கள் இனிவரும் காலங்களில் தங்களது புகார்களை B7 பொன்னேரிக்கரை காவல் நிலையத்தில் அளிக்கலாம். காவல் நிலையம் தொலைபேசி எண் 9498106809 என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments