ஒரு நாள் ஆன்மீக சுற்றுலா பேருந்து சேவை - அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
காஞ்சிபுரம், ஆக.27:
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் மண்டலம் சார்பில் ஒரே நாளில் 8 வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களை தரிசித்து வருவதற்காக ஆன்மீக சுற்றுலா பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இச்சேவையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடியசைத்து தொடக்கி வைத்து பேசியது..
ஆன்மீக சுற்றுலா பேருந்து சேவையானது காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து காலை 7 மணிக்கு தொடங்கும். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், வரதராஜப்பெருமாள் கோயில், ஏகாம்பரநாத சுவாமி கோயில், கோவிந்தவாடி அகரம் குருபகவான் கோயில், திருவாலங்காடு தேவார சிவாலயம், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில், ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் ஆலயம் உள்ளிட்ட பழமையும், வரலாற்றுச் சிறப்பும் உடைய 8 கோயில்களை ஒரே நாளில் பக்தர்கள் தரிசித்து வரும் வகையில் ஆன்மீக சுற்றுலா பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இப்பேருந்தில் ஒரு வழிகாட்டி இருப்பார், பேருந்தில் ஒலிபெருக்கி வசதி இருக்கும், பக்தர்களுக்கு ஒரு மஞ்சள் பையில் குடிநீர் பாட்டில், இரு பிஸ்கட் பாக்கெட்டுகள், கை தொடைப்பு காகிதங்களும் இருக்கும். பக்தர்களை அடையாளம் காணும் வகையில் ஒவ்வொருவருக்கும் ஒரு பேட்ஜ் வழங்கப்படும்.
பேருந்தின் உள்ளே தரை விரிப்பு, குப்பைத் தொட்டி, கடிகாரம், பயண அட்டவணை ஆகியனவும் வைக்கப்பட்டுள்ளது. வயதானவர்கள் ஏற இரு படிக்கட்டிலும் சிறு பலகையும் பொருத்தப்பட்டிருக்கும்.அவசரத் தேவைக்குரிய முதலுதவி மருந்துகளும் பேருந்தினுள் எப்போதும் இருக்கும்.பேருந்து சேவை கட்டணமாக ரூ.650 வசூலிக்கப்படும்.
பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புவோர் அதற்கான இணையதள முகவரியாக tnstc.in என்ற தளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் பேசினார்.
இந்நிகழ்விற்கு காஞ்சிபுரம் மாவட்டஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார். எம்பி க.செல்வம், எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.




No comments
Thank you for your comments