காஞ்சி வரதர் கோயிலில் சமபந்தி விருந்து - பொதுமக்களுக்கு உணவு பரிமாறினார் ஆட்சியர்
காஞ்சிபுரம், ஆக.15:
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள்கோயிலில் சுதந்திர தினத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு பரிமாறினார்.
அத்தி வரதர் புகழுக்குரிய காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் சுதந்திர தினத்தையொட்டி சமபந்தி விருந்து நடைபெற்றது.விருந்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு அங்கு வந்திருந்த பொதுமக்களுக்கு உணவு பரிமாறி சமபந்தி விருந்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கோயில் செயல் அலுவலர் எஸ்.சீனிவாசன் உட்பட கோயில் பட்டாச்சாரியார்கள்,பணியாளர்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.முன்னதாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியம் கருவேப்பம்பூண்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டார். அக்கிராமத்தின் வளர்ச்சி தொடர்பான 33 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு கிராம பொதுமக்களால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி,உத்தரமேரூர் ஒன்றியக்குழுவின் தலைவர் ஹேமலதா ஞானசேகரன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments