Breaking News

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய தர மதிப்பீட்டு குழு ஆய்வு

படவிளக்கம்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த தேசிய தர மதிப்பீட்டுக்குழுவினருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் கோபிநாத்


காஞ்சிபுரம், ஆக.2:

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பெறும் பிரிவுகளை தேசிய தர மதிப்பீட்டுக்குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.

தேசிய தர மதிப்பீட்டுக்குழுவினரான ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் சைத்தன்யா, கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்ட சுகாதாரப்பணிகள் பிரிவு உதவி இயக்குநர் கே.ஜித்தேஷ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். குழந்தைகளுக்கான வெளிநோயாளிகள்,உள்நோயாளிகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியனவற்றை ஆய்வு செய்து தர மதிப்பீடு செய்தனர்.

அரசு தலைமை மருத்துவமனை உயர் அதிகாரிகளிடமும் குழந்தைகள் சிகிச்சை தொடர்பான விபரங்களையும், சிகிச்சை அளிக்கும் முறைகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

முன்னதாக தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினரை சுகாதாரப் பணிகள் பிரிவு இணை இயக்குநர் கோபிநாத்,மருத்துவமனையின் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்கள் தர மதிப்பீட்டுக் குழுவினருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

ஆய்வுக்கு பின்னர் மருத்துவ அலுவலர் ஒருவர் கூறுகையில், 

ஆய்வுக்குழு மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும்.அதன் தொடர்ச்சியாக மத்திய அரசு காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனைக்கு தரச் சான்றிதழ் வழங்கும்.தரச்சான்று கிடைத்தால் அரசு தலைமை மருத்துவமனைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு கிடைக்கும். 

அந்த நிதி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிகிச்சைக்குரிய பிரிவுகளை மேம்படுத்த மிகவும் பயனுள்ளதாகவும் அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.


No comments

Thank you for your comments